தியாகி கே.ரத்தினசாமியின் 17ஆவது நினைவு தினத்தில் அவரது நண்பர்கள் சார்பில் பள்ளி இறுதித்தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு ரொக்கத் தொகையுடன் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தியாகி கே.ரத்தினசாமி ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டபோது குழந்தைகளின் கல்விக்காக, இடுவாய் ஊராட்சியில் உள்ள பள்ளிக்கூடங்களை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்தார். அவரது அந்தப் பணியை தொடரும் வகையிலும், கல்வியில் சாதித்த மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி சிறப்பு செய்வதென, ரத்தினசாமியின் நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி முதல் முறையாக, புதனன்று இடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கே.ரத்தினசாமி நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 2017 – 18 கல்வி ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காயத்ரி, செ.பவித்ரா ஆகியோருக்கு தலா ரூ.500 வீதம் ரொக்கம், புத்தகம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல் நடுநிலைப் பள்ளி அளவில் 8ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாருமதிக்கு ரூ.1000 ரொக்கம், புத்தகம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 428 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஏ.பவித்ராவிற்கு ரூ.1500 ரொக்கம், புத்தகம் மற்றும் நினைவுப் பரிசுவழங்கப்பட்டது. மேல்நிலை பள்ளி அளவில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்மங்கலம் பள்ளியில் 1169 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றதுடன், திருப்பூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவி எம்.சமீமாவுக்கு ரூ.2000 ரொக்கம், புத்தகம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தியாகி ரத்தினசாமியின் குடும்பத்தார் மாணவிகளுக்குப் பரிசளித்தனர். தியாகி ரத்தினசாமியின் நண்பரும், சம்பந்தியும், மங்கலம் பள்ளி முன்னாள் மாணவர் பேரவைத் தலைவருமான சி.வி.விநாயகம் மற்றும் தோழர்கள் ஆண்டுதோறும் பரிசளித்து மாணவர்களை ஊக்குவிப்பது என்றும் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தனர்.