சபரிமலை – வேளாங்கண்ணி – நாகூர் புனிதத் தலங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக்
காடுகளுக்கு வருகை தரும் பிற மாநில மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும் மகிழ்வான செய்தி கிடைத்துள்ளது. எர்ணாகுளத்திலி
ருந்து முற்பகல் 10.15 மணிக்கு புறப்படும் ரயில் எண்: 06015 கோட்டயம், கொல்லம், புனலூர்,தென்மலை, செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வந்தடையும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரயில் சேவை 6.4.2019 லிருந்து துவக்குகிறது. அதே போல் வேளாங்கண்ணியிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06016 திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர் வழியாக கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளத்தை பிற்பகல் 12.45 மணிக்கு சென்றடைவிருக்கும் வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் சேவை 7.4.2019 லிருந்து துவங்கவிருக்கிறது. வாரம் ஒருமுறை வந்து செல்லும் இப்பயணிகள் சேவைகளின் இணைய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

2016, 2017 மற்றும் 2018 மூன்று காலண்டர் ஆண்டுகளில் மட்டும் கேரளத்தைச் சேர்ந்த 35 பயணிகளுக்கு மேல் வேளாங்கண்ணியை
நோக்கிய தங்கள் சாலை பயண விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர் என்றும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் மாவட்டங்களிலிருந்து நாம் சேகரித்த செய்திகள் கூறுகின்றன. இச்சோக நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டே கேரள சமூக ஆர்வலர்களது தொடர் முயற்சிகளினால் இந்த சேவைகள் துவக்கப்பட்டுள்ளன.

இச்சேவைகள் சபரிமலை – நாகூர் – வேளாங்கண்ணி திருத்தலங்களுக்கு செல்லும் அனைத்து மத வழிபாட்டாளர்களுக்கும் ஆசியாவின் 2வது பெரிய முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக் காடுகளுக்கு வருகை தரும் மாணவர்கள் ஆய்வாளர்களுக்கும் அருங்கொடையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல தென்காசியிலிருந்து கொட்டாரக்கரா வரையிலான அழகு கொஞ்சும் மலைப்பிரதே
சங்களின் வழியாக செல்லும் 75 கிமீ நீள ரயில் பயணம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என பயண ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

விரைவில் துவக்கம்
பட்டுக்கோட்டை – காரைக்குடி அகல ரயில்பாதை வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. திருவாரூர் – பட்டுக்கோட்டை ரயில் பாதை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இதன் சோதனை ஓட்ட ஆய்வினை தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளர் ஏற்கனவே முடித்த நிலையில் பெங்களூர் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பாதுகாப்பு ஆய்விற்காக சேவையின் துவக்கம் காத்திருப்பில் உள்ளது. பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு இம்மாதம் நடைபெற்று விடும் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

இந்த ரயில் பாதை பாலங்கள் ரயில் நிலையங்களின் ஆய்வுகள் முடிந்த பின் சான்றிதழ் கிடைத்தவுடன் நிச்சயம் ஏப்ரல் மாத இறுதிக்குள் திருவாரூர் – காரைக்குடி பிரிவு பயணிகள் ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்கத் துவங்கும் எனத் தெரிகிறது. அப்போது எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் வண்டி எண்06015 மற்றும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் வண்டி எண் 06016-உம் திருச்சி செல்வதற்கு பதிலாக காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தடத்தில் திருப்பி விடப்பட்டு வாரம் இருநாட்கள் நிரந்தர சேவையாக இயக்கப்படும் என்றும் இதற்கான முன்மொழிவு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிருந்தாலும் ஏப்ரல் இறுதிக்குள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை துவக்கப்பட்டு விடும்
எனவும் இந்த மார்க்கத்தில் எர்ணாகுளம் வரைசெல்லும் அழகிய மலை வளைவு ரயில் பயணங்கள் இரு மாநில மக்களை மகிழ்விக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை நகரமான முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் மாற பிரகாசமாக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. நாகூர், வேளாங்கண்ணி, முத்துப்பேட்டை, சபரிமலை தலங்களை இணைக்கும் மத நல்லிணக்க மக்கள் ரயில் தடமாகவும் இதுமாறும் என்பதும் நிச்சயமே.

நீடா சுப்பையா