திருப்பூர் பத்மாவதிபுரம் கோவில் திருவிழாவில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் வியாழக்கிழமை திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருப்பூர் காந்திநகர் அருகிலுள்ள பத்மாவதிபுரம் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் கடந்த மாதம் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சலங்கையாட்டத்தில் ஆடும் பொழுது கை பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பகுதிஅதிமுக பிரமுகரான கருணாகரன் மகன் சுரேஸ், அவரது உறவினர்கள் ரகு, ராஜகோபால், அர்ஜீன் ஆகியோர் 9 பேர் கொண்ட கூலிப்படையினரை வைத்து அந்த பகுதியிலுள்ள தங்கராஜ் மற்றும் அவரது உறவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து ரகு, சுரேஸ், அர்ஜீன், விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கருணாகரனை கைது செய்ய வேண்டும் எனவும், கைது செய்ய தவறும் பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என பொதுமக்கள் எச்சரித்திருந்தனர்.இந்நிலையில் பொதுமக்களின் நெருக்கடியை தொடர்ந்து அதிமுக பிரமுகர் கருணாகரன் வியாழனன்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்பின் இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி ஆவணங்களை சமர்ப்பித்தார்.