திருப்பூர், திருநீலகண்டபுரம் பகுதியில் காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் வியாழனன்று வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.திருப்பூர், கொங்குமெயின் ரோட்டிலுள்ள திருநீலகண்டபுரம் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்புகிணற்றில் தண்ணீர் குறைந்த காரணத்தால் பொதுமக்கள் அந்த கிணற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி அருகில் வசிக்கும் தனியார் ஒருவர், கிணற்றை மண்ணை போட்டு மூடி அதில் வீடுகட்டும் பணியை துவக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபொழுது, பொதுமக்கள் தன்னை மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காணாமல்போன கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி வியாழனன்று வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், தங்களதுகோரிக்கையை மனுவாக கொடுங்கள், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கோரிக்கை மனு அளித்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.