விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பாக விவசாய விளை நிலங்களின் வழியே உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு கொங்கு மண்டல விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தைக் கைவிடக் கோரி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலத்துக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லும் மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகின்றனர். ஆனால் இக்கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அரசு நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து பல கட்டப் போராட்டங்களின் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் சாமாண்டூரில் கடந்த 3 ஆம் தேதி முதல்விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.

பத்து நாட்கள் நீடித்த உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்ட நிலையில், திருப்பூர் குமரன் சிலை அருகில் வியாழனன்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் கோவை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளின் அளப்பரிய தியாகத்தினால்தான் இலவச மின்சாரம் கிடைத்தது, நிலம் கையகப்படுத்தும் பழைய சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.அம்மாவின் ஆட்சி என்று கூறும் அதிமுக ஆட்சியாளர்கள், ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது தடுத்தி நிறுத்திய மக்கள் விரோத திட்டத்தை எல்லாம் எடப்பாடி முதல்வராக இருக்கும் பொழுது கொண்டு வருவது ஏன்? இது தான் அம்மா ஆட்சியா? எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை மீறி விவசாயிகள் ஒன்றிணைந்து உறுதியுடன் போராட வேண்டும் என்றார்.

இப்போராட்டத்தில் பேசிய தலைவர்கள், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கறுப்புக் கொடி போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் கேட்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையமே தடுத்தாலும் விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ், ஈஸ்வரன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் காளிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளார் எஸ்.சின்னசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் முத்துவிஸ்வநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ராஜ்குமார், தற்சார்பு விவசாய சங்க நிரவாகி கி.வே. பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், வழக்கறிஞர் ஈசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நாமக்கல் பெருமாள், ஈரோடு முனுசாமி, திருப்பூர் ஆர்.குமார், சென்னிமலை பொன்னுசாமி, வாவிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, கவின் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.