திருப்பூர் மாநகரத்துக்கு மக்களுக்கே தெரியாமல் மாநகராட்சி பட்ஜெட் ரகசியமாக வெளியிடப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் மாதத்தில் மாநகராட்சி பட்ஜெட் வெளியிடப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் இருந்தால் மாநகராட்சி மேயர் முன்னிலையில் நிதிக்குழுத் தலைவர் பட்ஜெட் நகலை மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வெளியிடுவார். ஆனால் அதிமுக ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் தனி அலுவலர்களே ஊடக, செய்தியாளர்களை வரவழைத்து, பட்ஜெட் நகலை அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டு விபரம் தெரிவிப்பார்கள். ஆனால் திருப்பூர் மாநகராட்சியின் 2019 – 20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வெளியிடுவது பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில் அதன் பிறகு பட்ஜெட் அறிக்கையை வெளியிட முடியாது. எனவே மாநகராட்சி பட்ஜெட் வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டனர்.

ஆனால் ஏற்கெனவே பட்ஜெட் வெளியிடப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரித்தபோது, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியே திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சி ஆணையர் “எளிமையான முறையில்” பட்ஜெட்டை வெளியிட விரும்பியதாலும், பிப்ரவரி 27ஆம் தேதி முதல்வர் பங்கேற்று மாநகர திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்காக திட்ட முன்னேற்பாடுகளைச் செய்ததாலும் வேறு யாரையும் அழைக்காமல் பட்ஜெட் வெளியிடப்பட்டது என்று கூறப்பட்டது. இது மாநகர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஏனென்றால் பட்ஜெட் அறிக்கையில்தான் வரவு, செலவு, புதிய திட்டங்கள், பற்றாக்குறை உள்ளிட்ட பல விபரங்கள் இருக்கும். ஆனால் மாநகரில் ஏற்கெனவே சொத்து வரியை கடுமையாக உயர்த்தி, ஏகப்பட்ட குளறுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநகர வருவாய் பற்றிய விபரத்தை தெரிவிக்காமல் மூடி மறைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் ஆகும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான என்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மாநகராட்சிக்கு வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் மாநகர பட்ஜெட்டை தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இந்த உரிமையை நிர்வாகம் மறுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது என்றார். மாநகராட்சி பட்ஜெட் வெளியிட்ட விபரம், ஆளும் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் துணை மேயருமான குணசேகரனுக்கும் தெரியாது என்று கூறினார். மாநகர மக்கள் தொடர்பு அலுவலரும் தனக்கு இது பற்றித் தெரியாது என்று கூறினார். யாருக்குமே தெரியாமல் பட்ஜெட் வெளியிடப்பட்டது பற்றி செய்தியாளர்கள் மாநகர ஆணையர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, பணிச்சுமை, முதல்வர் நிகழ்ச்சிக்கான தயாரிப்பு காரணமாக ஊடகங்களை அழைக்க முடியவில்லை என்று மிகவும் அலட்சியமாக கூறியுள்ளார்.

அதேசமயம் மாநகராட்சி இணையதளத்தில் பட்ஜெட் விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது, மக்கள் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் மாநகராட்சி இணையதளத்தில் பட்ஜெட் விபரம் ஏதும் இல்லை. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மற்றும் நான்காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல கட்டமைப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏறத்தாழ 1200 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் இப்பணிகளுக்கு 2019 – 20 நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்து செலவிட உள்ள நிதி விபரம் பட்ஜெட் அறிக்கையாக வெளியிடாதது வெளிப்படைத் தன்மையை மூடிமறைப்பதாக உள்ளது. ஏற்கெனவே திருப்பூர் மாநகராட்சி ஊழல் முறைகேடுகள் நிரம்பிய நிர்வாக சீர்கேடு கொண்டது என்ற பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் வெளியிடப்படாதது இந்த குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என முன்னாள் கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே ஆளும் அதிமுக அரசு உள்ளாட்சி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விதத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஏதேதோ காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் ராஜ்ஜியமாக மாறியுள்ள மாநகராட்சியில் மக்களுக்கு வெளிப்படையாக எதுவும் தெரியாமலும், அவர்களது கருத்துக்களைக் கேட்காமலும் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது, திடக்கழிவு மேலாண்மைக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் அடுத்த கட்டமாக பட்ஜெட்டை வெளிப்படையாக வெளியிடாமல் மறைத்தது அப்பட்டமான எதேச்சதிகார நடவடிக்கையாகும். ஆளும் அரசு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்பத்தான் அவர்கள் கீழிருக்கும் அதிகாரிகளும் இருப்பார்கள் என்பதற்கு ஏற்ப மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுவதற்கு ஏற்பத்தான் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளும் நடந்து கொண்டுள்ளனர் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
– (ந.நி)