திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 250 கிலோ பான்மசாலா, புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் பி.என்.ரோடு பகுதிகளில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி காவல்துறையினர் பிச்சம்பாளையம் 4 ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்பொழுது பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்பு கொண்டார்.

பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடோனிற்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு 250 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோமனூரில் இருந்து புகையிலை பொருட்களை ஆம்னி வேனில் ஏற்றி வந்து குடோனில் பதுக்கி வைப்பதும், பின்னர் இருசக்கர வாகனங்களில் வைத்து காலை நேரங்களில் சிறிய கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரிந்தது.இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லீலாராம் (28), கோபால்சிங் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும், குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்தி வந்த ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.