Posted on March 13, 2019, 7:34 am
0 secs [post-views]

பொள்ளாச்சியில் நடந்துள்ள கொடுமை தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவின் பின்புலம் கொண்ட கிரிமினல் கும்பல் ஒன்று பெண்களை காதல் என்ற பெயரில் சிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை ஆபாச படமெடுத்து சுற்றுக்கு விட்டுள்ளனர். கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக இந்தபெரும் கொடுமை நடந்து வந்துள்ளது. இது குறித்து காவல்துறையின் புலனாய்வு புலிகள் கண்டு கொள்ளவில்லை. மாறாக இந்த சம்பவம் வெளியே வந்த பிறகும் காவல்துறை குற்றவாளிகளை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்புவதாக பொள்ளாச்சி கொடுமை அமைந்துள்ளது. அதிமுகவின் முக்கிய பிரமுகரான பொள்ளாச்சி ஜெயராமன் என்பவரின் மகன் பெயரை இந்த சம்பவத்தில் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியான பின்னணியில், கைதான ஒருவர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியே அறிவித்த நிலையில், காவல்துறை எஸ்.பி., இதில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு தொடர்பில்லை என்று நற்சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே முடிவை எழுதிவிட்டு விசாரணை நடத்தினால் உண்மையான குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்? பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்த நிலையில், அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய காவல்துறை அவரது பெயரை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தெரிவிக்கக்கூடாது என்ற மிரட்டல் அன்றி வேறென்ன? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்து போராடியநிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வக்கில்லாத காவல்துறை போராடுபவர்களை கைது செய்து தனது வீரத்தை காட்டிக் கொள்வதுவெட்கக்கேடு.

அமைச்சர்கள் மட்டத்திலான தலையீட்டின் காரணமாகவே காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், அதிமுக அரசு வேறு வழியின்றி சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைக்க முன்வந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட முன்வராத சில பிற்போக்காளர்கள் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது என்பது மறைமுகமாக குற்றவாளிகளை ஆதரிப்பதேயாகும். காதல் என்றாலே எதிர்த்து கம்பு சுற்றும் சில சாதி, மதவெறி சக்திகள் இப்போதும் ஊளையிடுகின்றன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது மனிதகுலத்திற்கே எதிரான கொடும் செயல் என்ற உணர்வுடன் இதயமுள்ள அனைவரும் களம் இறங்கி போராட வேண்டும்.

Be the first and rate this post Rate It

0

Author Review

0

Not rated yet. Users Rate

Summary: