கோவை, மார்ச் 11-
பெண்களிடம் பழகி ஆபாசமாக படம் எடுத்து பலாத்காரம் மற்றும் பணப்பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கைதாகியுள்ள குற்றவாளிகளின் காவலை நீட்டித்து பொள்ளாச்சி நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டிக்கு காரில் கூட்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்து காரில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது சதீஷ்குமார் என்பவர் அவரை ஆபாசமாக வைத்து தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த அப்பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் படம் எடுத்து இணையதளத்தில் போடுவதாகவும், போடாமல் இருக்க பாலியல் இச்சைக்கு வருமாறும், பணம், நகை தருமாறும் மிரட்டியுள்ள னர். இதில் அந்த இடத்தை விட்டு தப்ப முயன்ற அந்த பெண்ணின்கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மிரட்டி பறித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து அந்த இளம்பெண் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இந்தபுகாரின் அடிப்படையில் பிப்.25 ஆம் தேதியன்று ஜோதி நகர் பகுதியில் காரில் வந்த சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்த குமாரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை மார்ச் 6 ஆம் தேதியன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலிருந்த சதீஷ், சபரி ராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய மூவரைதிங்களன்று பொள்ளாச்சி குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மூவ ருக்கும் மேலும் 15 நாட்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து இன்று  திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த, மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரினார். இதையடுத்து, 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார்.