எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் நிறுத்தியுள்ளது. இரண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள், 5 மாதத்துக்குள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். 2 விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தை  சந்தித்துள்ளன.

இதை அடுத்து, எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற  எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில்  157 பேர் பலியாயினர். அதன் கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
5 மாதத்துக்குள் ஒரே மாதிரியான இரு முறை விபத்துக்குள்ளானதால், விமானத்தின் வேகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க வேண்டாம் என உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா, இந்தோனேஷியா உத்தரவிட்டன.  இந்நிலையில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்க சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா தடை செய்துள்ளது.