புதுதில்லி, மார்ச் 11-

தேர்தல் ஆணையம், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தலை நடத்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை மக்களவைத் தேர்தலை நடத்தக்கூடிய அளவிற்கு நன்றாக இருக்கக்கூடிய அதேசமயத்தில், சட்டமன்றத் தேர்தலை நடத்தி நன்றாக இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கருதுவது புரியாத புதிராக இருக்கிறது. தற்சமயம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டதால் அம்மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். மக்களவைக்கும் மாநில சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்திட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிடும் பாஜக அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திறகு வருகை புரிந்த தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்தப் பிரச்சனையை தேர்தல் ஆணையம் ஆழமானமுறையில் பரிசீலனை செய்திட வேண்டும். மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கான அட்டவணையை அறிவித்திட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.

(ந.நி.)