நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பது அந்த அறிவிப்புகளில் ஒன்று. மத்தியில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் இந்த கட்டுப்பாடு முழுக்கமுழுக்க பொருந்தும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் படங்களை பாஜகவினர் பயன்படுத்தினர். பாஜக தலைவர் அமித்ஷாஉள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தங்களது கட்சியின் தனிப்பட்ட சாதனைபோல பேசி வருகின்றனர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஒருபடி மேலே சென்று இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் கர்நாடக மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தாம் வகிக்கும் உயர்ந்த பொறுப்பை உணர்ந்து பேசியது இல்லை. இந்த பிரச்சனையிலும் குறுகிய தேசிய இனவெறியைத் தூண்டி விடும் வகையிலும்,ராணுவத்தை தன்னுடைய குறுகிய தேர்தல்ஆதாயத்திற்காக பகடைக்காயாக பயன்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கிறார்.

அவர்உ.பி.யில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்பவர்கள் உடம்பில் இந்தியரத்தம் பாயவில்லை என்று கூறியிருக்கிறார். இவர்கள் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளை ஆட்டு மந்தை கூட்டம் போல நாட்டுமக்கள் அனைவரும் அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி மிரட்டுகிறார். நாட்டினுடைய பொதுத்துறைகளையும், இயற்கை வளங்களையும் அந்நியருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கும் இவர்களது உடம்பில் தேச பக்த ரத்தம் பாய்கிறதா என்பதுதான் கேள்விக்குறியான ஒன்று. வான்வழி தாக்குதல் நடந்தவுடன் விமானப்படை தளபதி எதுவும் கூறுவதற்கும் முன்புபலியான பயங்கரவாதிகள் 500, 600 என்று பாஜகவினர்கள் அள்ளிவிட்டார்கள். எண்ணிக்கை குறித்து எங்களிடம் எந்த விபரமும் இல்லை என ராணுவத்தரப்பு சங்கடத்தோடு மறுக்க வேண்டியிருந்தது. உயரிய தியாகத்துக்கு சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பது பாஜகவினர்தான். அவர்களுடைய தேச பக்திதான் கேள்விக்குரியது. வான்வழி தாக்குதல் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை. மாறாக கேள்வி கேட்பவர்களை தேச விரோதி என்று சித்தரிப்பது அப்பட்டமான அறிவு நாணயமற்ற செயலாகும். பாஜகவினரின் போலி தேசபக்த வேடம் களையும் நாள் நெருங்கிவிட்டது.