இந்தியாவில் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகமும் திகழ்ந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் 8.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தமிழகம் கடன் வலையில் சிக்கித் தவிக்கிறது. தமிழகத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. கடனுக்கு ஆண்டுதோறும் கட்டுகின்ற வட்டி 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளியது எடப்பாடி பழனிச்சாமி அரசும், அதற்கு துணை நிற்கின்ற மத்திய மோடி அரசும்தான்.

மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பொருளாதாரக் கொள்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருக்கிறது. கடந்த 3 மாதத்தில் அது இன்னும் மோசமாகியுள்ளது. நாட்டில் துன்பப்படாத மக்களே இல்லை. வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருவதால் வேலையில்லாத வாலிபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசிடம் கூறினால், நிதி இல்லை என கைவிரிக்கும் மோடி அரசு, கடந்த 4 ஆண்டுகளில் பெருநிறுவனங்களின் வங்கிக் கடன் 3.5 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள வங்கிக் கடன் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரபேல் விமானம் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதை இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவரையும் பாஜக அரசு மிரட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று சொல்லக் கூடிய நாடாளுமன்றத்தில், மக்களவை கூட்டத்தை குறைந்த நாட்களே பாஜக ஆட்சியால் நடத்த முடிந்தது. அந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றது மிக மிக குறைந்த நேரமே. உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை, மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உருவாக்கியது பாஜக அரசு. விவசாயிக்கு மோடி அரசு அறிவித்திருக்கும் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் தலா 100 ரூபாய். அப்படியென்றால் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 3 ரூபாய். 3 ரூபாயை வைத்துக் கொண்டு ஒருவர் ஒரு நாளைக்கு வாழ முடியுமா? ஒரு தனியார் நிறுவன காவலாளி, அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் தினமும் கனவு கண்டதை கூறுவார். முதலாளியும் அந்த கதையை தினசரி கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒருநாள் முதலாளி அந்த காவலாளியை அழைத்து நீ சொன்ன கனவு கதை சிறப்பாக இருக்கிறது. எனவே உனக்கு 5,000 ரூபாய் போனஸ் தருகிறேன் என்று கூறினார். கூடவே உன்னுடைய வேலையும் இன்றோடு முடிந்து விட்டது என்றார். 5 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்துவிட்டு, வேலை இல்லை எனக் கூறுகிறீர்களே என காவலாளி கேட்பார். அதற்கு முதலாளி இந்த நிறுவனத்தை பாதுகாக்கத்தான் உன்னை காவலாளியாக நியமித்தோம். தினசரி நீ இரவிலே தூங்கி கனவு காண்பதற்காக அல்ல என்றார். அதுபோல் இந்தியாவை பாதுகாக்க மோடியை தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள். இந்த நாட்டை காவல் காக்காமல் கதைகளையும், கனவுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு நாட்டை பாதுகாக்க முடியாத காவலாளி மோடியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.