தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை உள்ளது. ஒரு நபரின் அங்கீகரிக்கப்பட்ட முகவரிஆதாரமாக குடும்ப அட்டை கருதப்படுகிறது. அதனால்தான் பல இடங்களில் முகவரிசான்றாக குடும்ப அட்டையை கேட்கின்றனர்.தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் பேர் ‘ஒரு நபர்’ குடும்ப அட்டை வைத்திருக் கிறார்கள் என்று அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஜெயலலிதா எதிர்த்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, எடப்பாடி அரசு கமுக்கமாக ஏற்றுக்கொண்டு அமல்படுத்தி வருகிறது. அதன் விளைவை தமிழக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 20 கிலோ வழங்கப்பட்டு வந்த அரிசியின் அளவு12 கிலோ, 8 கிலோ, 4 கிலோ என குறைந்து விட்டது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உளுத்தம் பருப்பை அடியோடு ஒழித்துக் கட்டினர். ஒரு நபருக்கு 500 கிராம்தான் வழங்கப்படும் என்று சர்க்கரை அளவையும் சுருக்கினார்கள். ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த காகித குடும்ப அட்டைகளுக்கு மூடு விழா நடத்தினர். ஒரு குடும்ப அட்டைக்கு 10 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக 6, 4, 2 லிட்டரில் வந்து நிற்கிறது. இதன் தொடர் நடவடிக்கையாக நியாயவிலைக்கடைகளில் கோதுமையும் காணாமல் போனது. மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே சென்னை போன்ற பெரு மாநகராட்சிகளில் மட்டும் நாங்களும் கோதுமையை கொடுக்கிறோம் என்று கணக்கு காட்டி வருகிறார்கள்.

ஆளைக்கடிக்கும் அதிமுக
தற்போது ஆய்வு என்ற பெயரில் ‘ஒரு நபர்’ குடும்ப அட்டையை அடியோடு ஒழிப்பதற்கு கங்கணம் கட்டி விட்டனர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடித்த கதையாக பொது விநியோகத் திட்டம் அடியோடு ஒழித்துக் கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியிருக்கிறது. இதில் ஒரு நபர் அட்டை என்பது 19 லட்சம்தான். முதல் கட்டமாக ஒரு நபர் அட்டையை ரத்து செய்யும் பணி கொங்கு மண்டலத்தில் துவங்கி மேற்கு மண்டலம் வழியாக வட மாவட்டத்திற்குள் நுழைந்து தலைநகரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘போலி அட்டைகள்’ அதிகம் புழக்கத்தில் இருக்கிறது என்பதாகும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து புழக்கத்தில் உள்ள தனிநபர் மற்றும் இருநபர் அட்டைகளை நீக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆதாரத்துடன் அம்பலம்
“கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நபர் குடும்ப அட்டை ரத்தாகி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கணவனை இழந்த நிலையில் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகள் ஆதரவும் இல்லை. நேரடியாக ஆய்வு செய்ததில் இவற்றையெல்லாம் கண்டறிந்தோம். ஒரு நபர் அட்டைகளில் தனியாக முகவரி இருக்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதார் அட்டை இருக்கிறதா என்பதைக் கூட பாருங்கள் தவறில்லை. ஆனால்,தற்போது ஒரு நபர் குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டதா, இல்லையா என்பது கூடத் தெரிய வில்லை. அவர்களுக்கு எந்த பொருட்களும் ரேஷன் கடைகளில் கொடுப்பதில்லை. அந்த தாய்மார்கள் இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள். இதை கனிவுடன் பரிசீலித்து ஒரு நபர் குடும்ப அட்டை எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யாமல் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கெட்டிக்காரன் புளுகு
“ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் பொருட்களை தனியாக வாங்குவதற்காகவும், அரசு சலுகைகள் தனியாக பெறுவதற்காகவும், எல்லாப் பொருட்களையும் பெறுகின்ற நோக்கத்திலும் அவர்கள் தனியாக ஒரு நபர் குடும்ப அட்டை பெற்றிருக்கிறார்கள் என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 33 ஆயிரம் பேர்தான்கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். மற்ற யாருக்கும் ரேசனில் பொருட்கள் நிறுத்தப்படவில்லை. ஒரு நபர் அட்டை வைத்திருக்கும் யாருக்கும் உடனடியாக பொருட்கள் நிறுத்தப் படாது. இதுதொடர்பாக புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் அளித்தார். ஆனால், கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளில் வெளிப்படும் என்ற கதையாக மாறியது.

யார் பொறுப்பு?
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் துறை அதிகாரிகளால் நேரடி கள ஆய்வு செய்த பின்னரே சுமார் இரண்டு மாத காலம்கழித்துதான் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டு வருகிறது. பெரும்பாலான விண்ணப்பங்களை நிராகரித்த நிலையில், தகுதி இல்லாதநபர்களுக்கு அட்டைகள் எப்படி வந்தது? அதன் மர்மம் என்ன? இதற்கு யார் பொறுப்பு?ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நபர் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையை இணைத்து அதன் பின்புதான் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அப்படியிருக்க எப்படி இதை போலி அட்டைகள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்?“ஒரே வீட்டில் வசிக்கும் மகன் மற்றும் மருமகள் இரு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்ப அட்டையும், தாயாரை மட்டும் ஒரு உறுப்பினராக கொண்ட ஒரு அட்டையும்வைத்து இருக்கிறார்கள். இவர்களை அடை யாளம் கண்டு அனைத்து உறுப்பினர்களையும் ஒரே அட்டையில் இணைக்கும் பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர், ரேஷன் கடை பணியாளருடன் நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு நபர், இரு நபர்அட்டைகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கோவை மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மகன், மகள், மருமகன் இருந்தாலும் ஆதரவு இல்லை என்பதால் தான் விதவை, ஆதரவற்றோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறது அரசின் உத்தரவு. அத்தகைய ஒரு நபர் அட்டைகளை அந்த குடும்பத்துடன் இணைக்க முயற்சிப்பது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும். கணவன், மனைவியை இழந்தும் தனித் தனியாக வசிக்கும் ஒரு நபர் அட்டைகளுக்கும்,குடும்பத்தில் வாரிசுகள் இல்லாத கணவன், மனைவி இரு நபர், மகன் அல்லது மகள், மருமகன் அல்லது மருமகள் அல்லது பேரன், பேத்தி என இரு நபர்அட்டைகளையும் நீக்க முடிவு செய்திருக்கிறோம் என்று துறை அதிகாரிகள் கூறியிருப்பது அமைச்சருக்கும், அரசுக்கும் தெரியாமல் எடுத்த முடிவா? சென்னை கொளத்தூரில் ஒரு நியாய விலைக் கடையில் இம்மாதம் ஒன்றாம் தேதி ரேஷன் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்த போது கடை விற்பனையாளர் ‘ஒரு நபர் அட்டை வைத்திருப்பவர்கள் தயவு செய்து வரிசையில் நிற்க வேண்டாம். அவர்களுக்கு இந்த மாதம் பொருட்கள் வழங்கக்கூடாது என்று அதிகாரிகள் எங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்கள். எனவே நீங்கள் அதிகாரியை சென்று பார்க்கவும்’ என்றார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசிய போது உருப்படியான பதில் இல்லை.

மற்ற பகுதிகளில் விசாரித்ததில் சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த வாய்மொழி உத்தரவு வேகவேகமாக அமல்படுத்தப்பட்டு இருக்கி றது. ஒரு நபர் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட ஆணையர் அலுவலகத்திற்கு ஆதார் அட்டை,ஸ்மார்ட் கார்டு இரண்டையும் எடுத்துச் சென்று ஆணையரை சந்திக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். குடும்ப அட்டை என்பது அரசின் சலுகை மட்டுமல்ல; ஒரு நபரின் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆதாரமாக உள்ளது. அதனால்,தான் தனியார் துறையாக இருந்தாலும் அரசு துறை களாக இருந்தாலும் முகவரிக் சான்றுக்காக குடும்ப அட்டையைக் கேட்கின்றனர். ஆனால்,அந்த குடும்ப அட்டைகளையே நீக்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறது அதிமுக அரசு.ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் எடப்பாடி- மோடி கூட்டத்தை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால், மொத்தமும் நாசமாகும்!