விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்த்து 6வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசி சுமூகத் தீர்வு காண  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது; புதை வழித்தடம் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஏற்கனவே அமைத்த கோபுரங்களுக்கு வாடகை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியும் 03.03.2019ந் தேதி முதல் நாமக்கல் மாவட்டம், சாமண்டூரில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளது கோரிக்கைகளை நியாயமான முறையில் தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு காவல்துறையின் மூலம் கிராமங்களில்  விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து, வழக்கு தொடுப்பது போன்ற அடக்குமுறைகளை ஏவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் தமிழக அரசை கண்டித்து இன்று (8.3.2019) விவசாயிகள் வீடுகளிலும், வயல்வெளிகளிலும், கிராமங்கள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய  சங்க பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.