===என்.ராஜேந்திரன்===
கணினியைச் சார்ந்த இன்றைய வாழ்க்கைச் சூழலின் காரணமாக முதுகுவலி, கண் பாதிப்பு மற்றும் மணிக்கட்டு வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.முதலாவதாக பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி, இதற்குக் காரணம் சரியான உயரத்தில் நேரான இருக்கை அமைப்பு இல்லாததே. இருக்கை அமைப்பு சரியாக இருந்தாலும் சாய்ந்தபடியோ சரிந்து உட்கார்ந்தோ பணிபுரிவதும் முதுகுவலியை ஏற்படுத்தும்.கணினி திரைக்கும் (மானிட்டர்) கண்களுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். அதிகமான வெளிச்சம் அல்லது குறைவான ஒளியுடன் திரை இருந்தாலும் நாளடைவில் அது கண் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய அளவில் உள்ள எழுத்துக்கள் படங்களை பார்க்க உற்றுப் பார்ப்பதும் கண்களை பாதிக்கும். சிறிய எழுத்துக்களை படிக்கும்போதும், படங்களை பார்க்கும்போதும் எழுத்துரு அளவை அதிகமாக்கிக் கொண்டோ அல்லது பக்க அளவை ஜூம் செய்தோ பார்க்கவேண்டும்.

மவுஸ் பயன்படுத்துவதால் சிலருக்கு மணிக்கட்டில் வலி ஏற்படும். இதற்கு காரணம் கணினி இருக்கை அமைப்பு உயரமாக இருந்தாலோ எட்டிப்பிடித்து பணிபுரியும் படியாக மௌஸின் இடம் அமைந்திருந்தாலோ மணிக்கட்டில் வலி ஏற்படும்.மவுஸைப் பயன்படுத்தாமல் கணினியில் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலையில்தான் பலரும் இருக்கின்றனர். நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளுக்குக் காரணம் பொருத்தமில்லாத மவுஸ்கள்தான் என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர்.

இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். மவுஸை எப்படிப் பிடித்துப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு சில வழிகாட்டு அறிவுரைகளை மருத்துவர் நிபுணர்கள் வழங்கியுள்ளனர். அவை.

1. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.

2.மவுஸ் இயக்கும்போது உங்கள் மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக்கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.

3.மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டு, கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளவும். மவுஸ் பிடிக்கும் கரத்தை கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கீ போர்டுக்கு 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழே சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.

5. நம்முடைய மணிக்கட்டு அமைப்பைச் சற்று உற்று நோக்கினால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் இருக்கும். இப்பகுதியில் எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்குத்தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்துவது தவறாகும்.

6. மணிக்கட்டின் உட்புற மேற்பகுதியில்தான் முக்கியமான ரத்த நாளங்கள் செல்கின்றன. அதனால்தான் அந்த இடத்தில் நாடித் துடிப்பினை பார்க்கிறோம். அப்படிப்பட்ட இடத்தில் அழுத்தம் ஏற்படும் வகையில் மவுஸ் அல்லது கீபோர்டைப் பயன்படுத்துவது தவறாகும். இதனால் ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். சில சமயங்களில் காயம்கூட ஏற்படலாம்.

7. ஒரு தளத்தின் மீது மவுஸ் சாதனத்தை நகர்த்திப் பயன்படுத்துவது நமது வழக்கமாகும். மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கை இயக்கத்தை மையமாக வைத்தே இயக்க வேண்டும்.மணிக்கட்டுப் பகுதியை மையமாகக் கொண்டு இயக்குவது கை வலியை உருவாக்கும்.

8. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதி மெத்தென்று இருக்கவேண்டும் என்று எண்ணி மிருதுவான சிறிய துணி அல்லது கைக்குட்டையை மடித்து மெத்தை போல் வைத்துப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதும் தவறாகும்.

9. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியானது. இவ்வடிவத்திலேயே பெரும்பாலான நிறுவனங்கள் மவுசைத் தயாரிக்கின்றன. மவுசின் பட்டன்கள் மிருதுவாக இருக்கவேண்டும். அழுத்தம் அதிகமாக கொடுத்து கிளிக் செய்யும் வகையில் உள்ள மவுஸைப் பயன்படுத்தாதீர்கள்.

10. விதவிதமான வடிவங்களில், அழகான தோற்றத்தில் கிடைக்கும் மவுஸ்கள் கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அதன் வடிவமைப்பு மற்றும் அளவை ஆராய்ந்துதான் வாங்கவேண்டும்.