தில்லி
வரவிருக்கும் சையத் முஸ்டாக் அலி டி-20 கோப்பைத் தொடரில் களமிறங்கும் தில்லி வீரர்களைத் தேர்வு செய்ய செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்திற்குத் திங்களன்று 33 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அமித் பண்டாரி தலைமையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது.அன்று மாலை அமித் பண்டாரி மற்றும் தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் அணியைத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பயிற்சி ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த பொழுது, 8 பேர் கொண்ட கும்பல் அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஹாக்கி மட்டை, இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டை ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கியது.தடுக்க வந்தவர்களைத் துப்பாக்கியுடன் மிரட்டிவிட்டு மீண்டும் தாக்குதலை தொடர்ந்து தப்பிச் சென்றது.இந்த தாக்குதலில் தலையிலும், காது பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்த அமித் பண்டாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தில்லி காவல்துறை விசாரணையில் அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளார் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது எனத் தில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா எச்சரித்துள்ளார்.

கம்பீர் கண்டனம்
அமித் பண்டாரி மீதான தாக்குதல் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”தலைநகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த விவகாரம் மறைக்கப்பட்டுவிடக் கூடாது.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆயுள் தடையை உடனடியாக விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.