புதுதில்லி, பிப்.11-

ரபேல் போர்விமானங்களை வாங்கியதில் உள்ள ஊழல் தொடர்பாக உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ரபேல் ஊழல் தொடர்பாக, தி இந்து நாளிதழில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் புதுப்புது விவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இவை, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அதற்கான விதிமுறைகளில் இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவுகள்  தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டன என்ற விவரங்களும், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த குழுவிற்கு எதுவும் தெரிவிக்காமல் பிரதமர் அலுவலகமே இணையான பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தன என்பதும், பிரதமர் அலுவலகம், இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் முடியும்வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் எழுத்துமூலமான சட்டஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற பரிந்துரையைக்கூட,  மறுத்துவிட்டது என்பதும், பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து இறையாண்மை உத்தரவாதம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் தொடர்பாக எந்த வங்கியின் உத்தரவாதத்திற்கும் பிரதமர் அலுவலகம் முன்வரவில்லை என்பதும் இப்போது தெரிய வந்திருக்கின்றன. இவை அனைத்தும், பிரதமரால் தன்னுடைய கூட்டுக் களவாணிமுதலாளிக்கு, இந்தியக் கஜானாவை சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றே தெரிகிறது.

மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக முழுத் தகவல்களை மோடி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு அளித்திடவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றம் சுயமாகவே தன்னுடைய இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்பளித்த தீர்வறிக்கையை  மாற்றியமைத்திடுவதற்கப் பரிசீலித்திட முன்வரலாம்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டிய தற்போதைய மத்திய கணக்குத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி), இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில், அரசின் நிதிச்   செயலாளராக இருந்ததால், இதில் எவ்விதமாக முடிவு எடுப்பது என்பதில் இரண்டும் கெட்டான் நிலையில் (conflict of interest) இருப்பதுபோல அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, மத்திய கணக்குத் தணிக்கைத்துறைத்தலைவரின் நம்பகத்தன்மையே கடுமையான முறையில் சமரசத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இத்தகைய மாபெரும் ஊழலின் ஆணிவேரை வெளிக்கொணர்வதற்காகவும், அதன் அடிப்படையில்இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கூடிய விதத்திலும் ஓர் உயர்மட்ட அளவிலான புலன்விசாரணை நடத்திட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுகோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி.)