சென்னை,

போலி ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கொல்கத்தா போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஆனால், ஒருவர் தப்பி ஓடியதால், போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி ரகசிய எண்களைத் திருடி, போலி ஏடிஎம் கார்டு தயாரித்து அதில் சம்பந்தப்பட்ட எண்ணைப் பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டது.

இதுபோன்று சென்னையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் பணத்தைப் பறி கொடுத்தனர். இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து வடமாநில கும்பலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், ஆங்காங்கே இதுபோல் மோசடிகள் நடந்து கொண்டிருந்தன.

இதை அடுத்து, வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சென்னையில் தங்கி கைவரிசை காட்டிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீஸார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொல்கத்தா சைபர் க்ரைம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் புகுந்து அங்கு பதுங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் மண்டல், ஜிகேந்தர் குமார் மண்டல், பாஸ்கர் குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மற்றும் 21 போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவில் கைவரிசை காட்டிவிட்டு சென்னைக்கு தப்பி வந்ததாகவும், அவர்களைக் கைது செய்து கொல்கத்தா அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கொல்கத்தா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விசாரணையின் போது சிறுநீர் கழிப்பதாக கூறி வெளியே சென்ற பாஸ்கர் குமார் தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் கொல்கத்தா போலீஸார் அழைத்து சென்றனர்.