2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியா முழுமைக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) தடாலடியாக அமல்படுத்தியது மத்திய மோடி அரசு.ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தப் போவதாகக் கூறி அதற்கான வரிவிகிதங்களையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்து சிறு வணிகர்கள், வியாபாரிகள், நெசவு மற்றும் ஜவுளித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜி.எஸ்.டி.க்கு எதிராக கடுமையாகப் போராடிவருகிறார்கள். ஏற்கனவே, வரிவிலக்கு அளிக்கப்பட்ட சுமார் 500 பொருட்களுக்கும் இந்த ஜி.எஸ்.டி. முறையில் சுமார் 5% முதல் 18% வரை புதியதாக வரி விதித்தது மோடி அரசு. இதன் காரணமாக வரும் நாட்களில் கடுமையான விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கெடுபிடிகளாலும், சட்ட திட்டங்களாலும், சிறு நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கும், சிறு வியாபாரிகளும், குடிசைத் தொழில் செய்பவர்களும் வியாபர முடக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஒரு அபாய சங்காகவே உள்ளது ஜிஎஸ்டி.

இதற்கு ஈரோடு ஜவுளி வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. ஈரோடு கனி மார்கெட் பகுதியில் தினசரி மற்றும் வார சந்தை என 700க்கும் மேற்பட்ட கடைகளில் ஜவுளி வியாபாரத்தை சிறு, குறு வியாபாரிகள் செய்து வருகிறார்கள். இவர்கள் மாதம் ரூ.2 லட்சம்வரை வியாபாரம் செய்து வந்தனர். ஆனால், சேவை மற்றும் சரக்கு வரி விதிப்பின் காரணமாக சிறு, குறுவியாபாரிகள் செய்து வந்த ஜவுளி தொழில் முடங்கியுள்ளது என தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. இதில் தினசரி சந்தையாக 330 கடைகளும், வார சந்தையாக 740 கடைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஜிஎஸ்டியின் காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் கடைகளும் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என்ற அபாயத்தில் இருக்கிறது. ஜிஎஸ்டி ஓரே வரிதான் என்றும், வேறு வரிகள் கிடையாதும் என்றும் கூறுகின்றனர். ஆனால் பஞ்சுக்கு ஒரு வரி, நூலுக்கு ஒரு வரி, நெசவுக்கு ஒரு வரி, சாயமேற்றுதலுக்கு ஒரு வரி என தனித்தனியாக வரி விதிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் முடிந்த பிறகு ஏற்றுமதிக்கு வரிஎன தொடர்ந்து வரி மேல் வரி விதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து நுகர்வோர் தலையில் விழுந்துள்ளது.இதனால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.10 லட்சம் வரை சிறு, குறு வியாபாரிகள் வரி இல்லாமல் பயன்படுத்தலாம் எனகூறுகிறார்கள். ஆனால், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் போது ஜிஎஸ்டி எண் கேட்கிறார்கள். எண் வேண்டுமென்றால் வரி கட்ட வேண்டும். மீண்டும் அதே நிலைதான். ரூ.10 லட்சத்திற்கு குறைவாக இருந்தாலும் வரி கட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சிறு, குறு வியாபாரிகள் தான். ஜிஎஸ்டியால் பெரிய கார்ப்பரேட்கள் மட்டுமே மேன்மேலும் அதிக லாபத்தை அடைகின்றன. கனிமார்க்கெட் பகுதியில் சேலைகள், வேட்டி, சட்டைகள் என சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான பல விதமான ஆடைகள் விற்கப்பட்டு வருகிறது.

முடிந்த பொங்கல் பண்டிகைக்கு கூட அதிக அளவில் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு செய்யாததற்கு முன்பு சேல்ஸ் மற்றும் இன்கம்டாக்ஸ் வரிகள் மட்டுமே செலுத்தி வந்தனர். இதனால், விற்பனையும் நன்றாக நடைபெற்று வந்துள்ளது. ஜிஎஸ்டி வந்தபிறகு மொத்த வியாபாரிகளிடமிருந்து வியாபாரிகள் ஜவுளி பொருட்களை வாங்கும்பொழுது 15 சதவிகித விலையை உயர்த்தி வழங்குவார்கள். வியாபாரிகளிடம் இருந்துசிறு, குறு வியாபாரிகள் ஜவுளி பொருட்களை வாங்கும் பொழுது 15 சதவிகிதம் உயர்த்தி விற்பனை செய்வார்கள். 30 சதவிகித வரி உயர்விற்கான தொகையால் நுகர்வோர்களாகிய பொதுமக்கள் மட்டுமேபாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பு 80 சதவிகிதம் ஆக விற்பனை செய்து வந்த கனிமார்க்கெட் ஜிஎஸ்டி அமல்படுத்தி அதற்குப் பின்பு விற்பனை 20 சதவிகிதமாக குறைந்துள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் சிறு குறு வியாபாரிகளின் அபாய சங்காகவே ஜிஎஸ்டிஉள்ளது என வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கனிமார்கெட் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நூர் முகமது கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு கனி மார்க்கெட்டில் விற்பனை என்பது கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. மேலும் முதலில் மத்திய அரசு ஜவுளித்துறைக்கு அறிவிக்கும்போது 18 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பாதிப்பு அதிகமாக உள்ளது என தொடர்ந்து வலியுறுத்திய பிறகுஅதனை 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதன் பின்பு தற்போது மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்த மத்திய அரசு தற்போது 5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்நிலையில் ஜவுளித்துறை கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் தொடர்ந்து கனிமார்கட் ஜவுளி விற்பனையில் பின்னடைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் இருந்து ஜவுளி பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து ஜவுளி வியாபாரிகளின் கோரிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

லெனின், ஈரோடு.