‘‘அந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனாலும் அந்த ரணம் மட்டும் இன்னமும் ஆறவில்லை. வரலாற்றில் அழியா இடம் பிடித்து அள்ளிச் சென்றது அந்த ஆழிப்பேரலை. இதில் மடிந்த உயிர்கள் ஏராளம் ஏராளம்! 2006 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய ஆழிப்பேரலையால் கடற்கரை மீனவ கிராமங்கள் அல்லோலக்கலப்பட்டது. பல கிராமங்கள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து போனது. அந்த துயரத்தில் திக்கற்ற குழந்தைகளுக்கு அழகிய ஆடைகளை அணியச்சொல்லி அழகு பார்க்க பெற்றோர் இல்லை. ஆசைப்படும் பொருட்களை வாங்கிக் கொடுக்க ஒருவரும் இல்லை. அத்தகைய குழந்தைகளுக்கு கடலூர் மாவட்டத்தில் ஆதரவு கொடுத்ததால் கால்பந்து விளையாட்டில் நாடு முழுக்க சென்று அசத்தி வருகின்றனர். இதை பெண்கள் கால்பந்து அணி என்று கூறுவதை விட ‘ஒரு குடும்பம்’ என்றே கூற வேண்டும்.

நம்பிக்கைச் சுடர்!
ஆதரவற்ற குழந்தைகள் கால்பந்தாட்டத்தில் பிரகாசிப்பதும் மூலமே, அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் பிரகாசமாக அமையும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தாம் ஒரு கால்பந்து வீரர் என்பதால் அந்த மாணவிகளை சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனையாக உருவாக்கிட வேண்டும் என்கின்ற லட்சியம் கொண்டவர் ஆசிரியர் மாரியப்பன். கடலூர் சேவை இல்லத்தில் தங்கி வேணுகோபாலபுரம் மகளிர், மஞ்சக்குப்பம், முதுநகர் அரசு பள்ளிகளிலும் படித்து வந்த சுமார் 60 மாணவர்கள் மாரியப்பன் ஆசிரியரிடம் கால்பந்து பயிற்சியில் களமிறங்கினர்.

புதிய அத்தியாயம்!
ஆரம்பத்தில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சியை துவக்கினாலும் பிறகு தனது நண்பர்களின் உதவியோடு புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மற்றும் கல்விக் கழகத்தை உருவாக்கி தினசரி காலை, மாலை இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 37 பேர் தேசிய அணியிலும் 5 பேர் சர்வதேச அணியிலும் இடம் பிடித்து நம்பிக்கை சுடராய் ஜொலிக்கிறார்கள். கடலூரைச் சேர்ந்த கே. இந்துமதி, கே.சுமித்ரா, ஆர். சத்யா ஆகிய மூவரும் ஒலிம்பிக் தகுதி முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்து, ஈரான் அணியை துவம்சம் செய்து, அணியை இரண்டாவது சுற்றுக்கு அழைத்துச் சென்று கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைத்துள்ள இவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து விளையாடி வரும் தமிழக பெண்கள் அணி தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதில்லை என்ற சோகம் தொடர்ந்தது. இந்த சோக வரலாற்றுக்கு கடந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக பெண்கள் அணி, அசுர பலம் மிக்க மணிப்பூர் அணியிடம் மிக எளிதில் விழுந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ தலைக்கீழாகும். மணிப்பூர் வீராங்கனைகளுக்கு கடும் சவால் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி புரட்டி எடுத்த தமிழக வீராங்கனைகள் கோப்பையை வென்று கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினர். இந்த தொடரில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். அதிலும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். 10 கோல்கள் அடித்து சாதனை படைத்ததோடு ஆட்டநாயகி விருதையும் தட்டி வந்தார் கடலூர் இந்துமதி.

வீரமங்கைகள்!
20 பேர் கொண்ட தேசிய அணியில் 18 பேர் கடலூரைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்தவர்களே இடம்பிடித்து கால்பந்து உலகில் சாதனை படைத்திருக்கும் இந்த வீராங்கனைகள் ‘முதலமைச்சர்’ கோப்பைக்கான விளையாட்டில் அனைத்து அணிகளையும் அனாவசியமாக ஊதித் தள்ளி தொடர்ச்சியாக கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த தென் மண்டலப் போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் கலந்து கொண்ட இந்த வீராங்கனைகள் வெற்றிவாகை சூடி தங்கப் பதக்கத்தை வென்றனர். கடந்த 2011-ஆம் ஆண்டில் நடந்த 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றில் ஜோர்டானை வீழ்த்திய இந்திய அணியில் ராதிகா, ராதா உள்ளிட்ட மூன்று பேர் கடலூரிலிருந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்திய தென்னிந்திய அளவிலான தொடரின் இறுதிப் போட்டியில் எதிரணிகளை அணியை பந்தாடிய கடலூரைச் சேர்ந்த வனிதா, இந்துமதி, சுமித்ரா, நதியா ஆகியோர் கோல் மழை பொழிந்து அமர்க்களப்படுத்தி தங்கள் அணிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தனர். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் 2012 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று வரும் கடலூர் மாணவர்கள் நான்கு முறை கோப்பையை வென்று முதலிடத்தை தக்க வைத்தனர். இரண்டுமுறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.

களமும்-பயிற்சியும்!
கடலூரில் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்து, ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்து 1978 ஆம் ஆண்டில் கும்பகோணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக பணியில் சேர்ந்தவர் மாரியப்பன். 27ஆண்டு கால சேவைக்கு பிறகு கடலூர் துறைமுகம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மாறுதலானார். அங்கு ஏழாண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றி 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஆதரவற்ற சிறுமிகளை தத்தெடுத்து கல்வி, உணவு, உடை, இருப்பிடம் என அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு கால்பந்து பயிற்சி கொடுப்பதிலிருந்து இன்னமும் மாரியப்பன் ஓய்வு பெறவில்லை. மாரியப்பன் தத்தெடுத்த 33 பெண்களில் 7 பேர் காவல்துறை பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். இரண்டு பேர் உதவி ஆய்வாளர். இருவர் ரயில்வே துறையில் பணியாற்றுகிறார்கள். பலர் இளங்கலை, முதுகலை பட்டங்களை முடித்ததோடு பிஎச்டி, எம்பில் பட்டமும் முடித்திருக்கிறார்கள்.

பொன் எழுத்துக்களால்…
அரசு காப்பகத்தில் படித்து வந்த மாணவிகளின் அளப்பரிய சாதனைக்கு பாராட்டு விழா எடுத்த கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மருதவாணன், புருஷோத்தமன், வெங்கடேசன், கருணாகரன் ஆகியோர் கூறுகையில், ‘‘ஆதரவு இல்லா இந்த வீராங்கனைகள் பெற்ற வெற்றி கடலூர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டும். தன்னலம் கருதாமல் இவர்களை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல பாடுபட்டு வரும் ஆசிரியர் மாரியப்பனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை’’ என்றனர்.

33 பெண் குழந்தைகள்!
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சுப்பிரமணியம்-மனோரஞ்சிதம் தம்பதியரின் மகனான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும் கால்பந்து பயிற்சியாளருமான மாரியப்பன் கூறுகையில், ‘‘ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கு கால்பந்து கற்றுக்கொடுத்து வந்தேன். அதைப் பார்த்த காப்பக குழந்தைகள் எங்களுக்கும் பயிற்சி தருவீங்களா? என்று கேட்டனர். அக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றவே பெண்களுக்கு பயிற்சியை துவக்கினேன். இன்றைய கால சூழலில் 33 பெண் குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அவர்களுக்கு இலவசமாக கல்வி கொடுப்பதும் விளையாட்டை கற்றுத் தருவதும் என் தனி ஒருவனால் மட்டுமே நிச்சயம் முடியாது. இந்த முயற்சிக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் என் மனைவியும் நண்பர்களும். முதலில் 17 பிள்ளைகளை தத்தெடுத்து எனது சம்பளத்தில் பெரும் பகுதியை செலவு செய்து வந்ததால் ஆரம்பத்தில் சங்கடப்பட்ட என் மனைவி, பின்னர் அந்த பிள்ளைகளின் நிலைமைகளை புரிந்து கொண்டு முழுமையாக ஒத்துழைத்ததால் கூடுதலாக 16 பிள்ளைகளை சேர்த்து 33 பெண் பிள்ளைகளுடன் என் இரண்டு மகன்களையும் வளர்த்து வருகிறேன்.

சிந்தனையில் மாற்றம்…
விளையாட்டில் ஆர்வம் காட்டினால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கும் என்பது பெற்றோரின் தவறான பார்வையும் சிந்தனையும்கூட. விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முன்முயற்சியால் கடந்த காலங்களைக் காட்டிலும் கால்பந்து விளையாட்டு வேகமாக வளர்ந்துள்ளது. கால்பந்து பயிற்சிக்கு புதிய புதிய யுத்திகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொடுக்க தமிழகத்தில் தகுதியான பயிற்சியாளர்கள் கிடையாது. போதிய அளவில் மைதானங்களே இல்லை. இதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பசியும்… ஒலிம்பிக் கனவும்!
ஒலிம்பிக்கு தகுதி பெறுவதற்கான இறுதி சுற்று பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக கடலூரிலிருந்து வேகவேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்த வீராங்கனைகளிடம் சில நிமிடம் உரையாடியபோது… அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து கொண்டு அரசு பள்ளி-கல்லூரிகளிலும் படிக்கும் நாங்கள் சின்ன வயதிலேயே அப்பா,அம்மாவை சுனாமியால் இழந்தோம். உறவினர்களும் புறக்கணித்தனர். பசியோடு கொடுமை வாட்டியது. அப்போது எங்களை அரவணைத்து தன்னம்பிக்கையுடன் கால்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்த மாரியப்பன் ஆசிரியரை பயிற்சியாளர் என்று கூற மாட்டோம். எங்கள் அனைவருக்கும் தாய், தந்தை, சகோதரர் அனைத்தும் அவரே. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி மேற்படிப்புக்கும் தனது சொந்தப் பணத்தை செலவழித்து வளர்த்து, ஆளாக்கி சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கும் அத்தனை பெருமையும் அவருக்கே சொந்தமாகும். மாரியப்பன் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் அசுர வளர்ச்சியால் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என அனைத்துப் பிரிவுகளிலும் கடலூர் அரசு காப்பக பிள்ளைகளே அதிக இடம் பிடித்திருக்கிறோம். 11 பேர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். இதில் மூன்று பேர் ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும் விளையாடி வருகிறோம். இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டின் பெருமையை உயர்த்திப்பிடிப்போம் என்று விடைபெற்றனர். அவர்களது கனவு நிறைவேற நாமும் வாழ்த்தி வழி அனுப்பினோம்.