மயிலை சிங்காரவேலர் 1860ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு, மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று உயர்நீதி மன்ற வழக்கறிஞராக ஆன பிறகு பணத்தையும், பதவியையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கறிஞர்களின் மத்தியில் ஏழை எளிய மக்களுக்காக வாதாடினார்.  குப்பம் எனப்படும் மீனவ குடியிருப்பில் பிளேக் நோய் ஏற்பட்ட போது அவரது வீட்டில் பொது சமையல் செய்து மக்களுக்கு உண வளிப்பதிலும், இன்ஃளுவென்சா காய்ச்சல் கொள்ளை நோயாக தலையெடுத்த போது தடுப்பு நடவடிக்கையும் நிவாரணப் பணிகளில் முன்நின்றவர். 1925ல் சென்னை நகராண்மை கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றினார். சாக்கடை கழிவு குப்பை, மலஜலம், நகரத்தில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு ஆகியவற்றை சீரமைப்பது நகராண்மை கழகத்தின் தலையாய கடமை என வாதிட்டார். மேலும் ஏழை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம், பால் வழங்கும் திட்டம், பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டம் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.

கவர்ந்து இழுத்த சோசலிச தத்துவம்
மீனவர்களுக்கு தேவைக்கு ஏற்ப வருமானம் இல்லாமல் கடற்கரையில் குடிசைகளுக் கிடையிலே மிக மோசமான, சுகாதாரமற்ற வாழ்நிலையில் கல்வியும், குடியுரிமையும் மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் வசித்து வந்த மக்களை கண்டு மன வேதனைப்பட்டார். மீனவ சமூகத்தை மக்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளை கண்டு சிறு வயதிலேயே மக்களின் துன்ப துயரங்களுக்கான காரணங்களை தேட முற்பட்டார். வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவானவர் தான் சிங்காரவேலர். ஆங்கிலம், தமிழ், இந்தி, உருது, பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்று பன்முக மொழி புலமை அவரது தேடுதலை ஏற்படுத்தியது. 1902ல் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட சிங்காரவேலர் சோசலிஸ்ட் அமைப்பாளர் செர்ஹார்டியின் தலைமையின் கீழ் புதிதாக உருவாகியிருந்த தொழிலாளர் கட்சி, பிரிட்டிஷ் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மாமேதை ஏங்கல்ஸ் மறைந்து 7 ஆண்டுகள் ஆன பின்னணியில் சோசலிஸ்ட் தத்துவம் – நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கியது. இந்தியாவிலிருந்து வந்திருந்த இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சோசலிச தத்துவம் சிங்காரவேலரையும் கவர்ந்து இழுத்தது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக
கயா காங்கிரஸ் மாநாட்டில், “உலக கம்யூ னிஸ்டுகளின் சிறப்புக்குரிய வரிசை முறையில் உலக நலனில் அக்கறை உள்ள மாபெரும் இயக்கத்தின் பிரதிநிதியாக இங்கு நான் வந்துள்ளேன். இந்திய விடுதலை இயக்கம், சுயராஜ்ய குறிக்கோள் உடைய இந்திய தொழிலாளர் ஆற்றலை திரட்ட தவறியுள்ளது; அது தேச அளவிலான வன்முறையற்ற வேலை நிறுத்தங்களை நடத்தி அவ்வாற்றலை அணி திரட்ட வேண்டும். ஒடுக்கப்பட்டவராக உள்ள தொழிலாளர்கள் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை ஈட்டும் மைய சக்தியாக உருவாகும்” என முன்மொழிந்து பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை
1924 செப்டம்பர் சத்திய பகத் அமைத்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும் இந்திய மார்க்சியவாதிகளின் தனித்தனி குழுக்களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை சிங்காரவேலர் தொடர்ந்தார். ஒன்றிணைப்பு மாநாடு கூட்டுவதற்காக முன்னேற்பாடுகளை செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ்காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒருங்கமைப்பு கமிட்டி நிறுவப்பட்டது. 1925ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் எம்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டுகளின் மாநாட்டு உரையில் தீண்டாமை, சாதி, மதம் ஆகிய பிரச்சனைகளை சுய ராஜ்ய திட்டத்தில் இணைக்க வேண்டுமா என்பது குறித்து விளக்குகிறார். தீண்டாமை பிரச்சனை என்பதே அடிப்படையில் விவசாய பிரச்சனையாகும்; சமூக அநீதிகளை எதிர்ப்பதை போலியாக பேசி வரும் இந்திய சீர்த்திருத்தவாதிகள் பணக்கார மனப்பான்மையுடன் இருப்பதையும் சமூக மாற்றத்தை விரும்பாதவர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சாதி, தீண்டாமை ஆகிய பிரச்சனைகளை பொருளாதார நோக்கிலிருந்து அணுகுவதை இந்திய சீர்த்திருத்தவாதிகள் தவிர்க்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தின் இரு கூறுகளான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுடன் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறார்.

தென்னிந்தியாவை குலுக்கிய பத்து நாட்கள்
1927, 1928 ஆம் ஆண்டுகள் இந்தியா முழுவதுமுள்ள ரயில்வே தொழிலாளர்களின் பேரெழுச்சி ஏற்பட்டது. சிக்கன சீரமைப்பு, ஆள் குறைப்பு, திட்டத்திற்கு எதிராக தென்னிந்திய இரயில்வே வேலை நிறுத்தம் சிங்காரவேலர் தலைமையில் 10 நாட்களுக்கு மேல் நீடித்தது. தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கை களுக்காக பிரிட்டிஷ் கம்பெனியை எதிர்த்து நடைபெற்ற, வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்ச்சி என மக்கள் குறிப்பிட்டனர். ரயில்வே தொழிலாளர்களின் எல்லா பிரிவுகளும் கடைநிலை ஊழியர் முதல் அலுவலர்கள் வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரயில்கள் ஓடுவது நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளாக மாறின. போலீஸ் பாதுகாப்புடன் ஓட்ட முயன்ற வண்டிகளை அமைதியான முறையில் ரயில் பாதையில் குறுக்கே படுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் எல்லா வண்டிகளையும் நிர்வாகம் நிறுத்த நேரிட்டது. துப்பாக்கி சூடு, தடியடி, சிறை என அப்போராட்டம் ரத்தத்தால் நிரப்பப்பட்ட போராட்டமாக மாறியது. தென்னிந்திய இரயில்வே சதி வழக்கில் சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்க தலைவராகிய டி.கிருஷ்ணசாமிபிள்ளை ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பெருமாள் என்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 1930ல் விடுதலையான போது சிங்காரவேலருக்கு வயது 70.

இளம் தொழிலாளர் கழகம்
அமீர் ஹைதர்கான் தலைமறைவாக சென்னையில் அணி திரட்டி துவங்கிய இளம் தொழிலாளர் கழகத்தை சேர்ந்த முன்னணியிலுள்ள இளம் தொழிலாளர்களும், அதன்பின்னர் தோன்றிய தொழிலாளர் பாதுகாப்புக் கழக தொழி லாளர் தோழர்களும் அறிவுரைக்காக அவரிடம்
செல்வது வழக்கம். 1936 தோழர் எஸ்.வி.காட்டே பம்பாயிலிருந்து வெளியேற்றப்பட்டதும் சென்னைக்கு வந்தார். ஏ.எஸ்.கே., ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், வ.சுப்பையா, முருகேசன் ஆகியோருடன் பன்முறை சிங்காரவேலரை சந்தித்தார். இந்த இளம் தலைமுறையை சேர்ந்த கம்யூனிஸ்டுகள் 1935 முதல் தொழிலாளி வர்க்க போராட்டத்தை முன் எடுத்துச் சென்றனர். காங்கிரஸ் – சோசலிஸ்ட் கட்சியில் பணியாற்றி வந்த கம்யூனிஸ்ட்டுகள் நகரத்திலுள்ள தொழிலாளர்களை தத்தம் தொழிற்சங்கங்களில் போராட்ட மனப்பான்மை கொண்ட ஒரு சக்தியாக அமைக்க முன்முயற்சி எடுத்தனர். கள் இறக்குவோர் சங்கம், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கம், கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் ஆலை தொழிலாளர் சங்கம் மற்றும் வெவ்வேறு இடங்களில் பல்வேறு சங்கங்களை உருவாக்கினர்.

என் கடமையே தொழிலாளி வர்க்கத்திற்கு பணி செய்வது தான்
1937-38 தோழர் காட்டே வற்புறுத்தலுக் கிணங்க டிராம்பே தொழிலாளர் சங்கத்தில் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார். 1945 சென்னை அச்சக தொழிலாளர்கள் மாநாட்டில் “இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையை செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் இடையே இருந்து, உங்களுடன் ஒருவராக, உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்ற எதை நான் விரும்ப முடியும்” என்று பேசினார்.

முதல் மே தின விழா கொண்டாடியவர்
மே தின விழாவை உலக முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும்படி சுவாமி தினானந்த் அவர்களுக்கு தந்தியொ ன்றை சிங்காரவேலர் அனுப்பினார். தொடக்கத்தில்மே நாள் இங்கிலாந்தில் மட்டுமே கொண்டாடப்பட்டது. பிறகு பல நாடுகளிலுள்ள தொழிலாளர்களும் அதை கொண்டாடத் தொடங்கினர். சென்னை மாநகரத்திலுள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு தொழிலாளர்களின் வாழ்வு உயர வழியொன்றை காண பாட்டாளி வர்க்கத்தின் நாளாக மே முதல் நாளை கொண்டாட வேண்டுமென மே 1 – 1923 முதல் முதலாக இந்தியாவில் மே தினத்தை நடத்தியவர் சிங்காரவேலர்.

காந்திக்கு பகிரங்க கடிதம்
“அயல்நாட்டு அதிகார வர்க்கத்தை மட்டு மின்றி எதிர்காலத்தில் நம் சொந்த மக்களின் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நாம் வெற்றிபெறும் வரையில் நமது நற்பேரற்ற மக்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் ஒருபோதும் இருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஆதலால் கம்யூனிசம் மட்டுமே, அதாவது நாட்டிலுள்ள எல்லாத் தொழி லாளர்களும் பொதுவாக பயன்படுத்தவும் நலம் பெறவும் நிலத்தையும் இன்றியமை யாத தொழிற்சாலைகளையும் பொதுவுடை யாக்குவதே, நம் மக்களுக்கு மன நிறைவையும் சுதந்திரத்தையும் அளிக்கும் உண்மையான நடவடிக்கையாகும்.” என 1921ல் மகாத்மா காந்திக்கு பகிரங்க கடிதம் ஒன்றை சிங்கார வேலர் எழுதினார். நாடு அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பொருளாதார சுதந்திரம் பற்றிய சிந்தனையை, சமதர்ம சமுதாயம் பற்றிய சிந்தனையை நாட்டுக்கு தந்த மகத்தான சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டாகவும், சிந்தனைச் சிற்பியாகவும், பன்மொழி அறிஞராக, தத்துவ புலமை பெற்றவராக, தொழிற்சங்க தலைவராகவும், விவசாயி, தொழிலாளி ஒற்றுமையை உயர்த்திப் பிடித்த தலைவராகவும் பணியாற்றிய தோழர் சிங்காரவேலரின் வாழ்வும் சிந்தனையும் எப்பொழுதும் பாட்டாளி மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இருந்தது. கான்பூர் சதி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சந்தித்து, மார்க்சியத்தையும், ரஷ்ய புரட்சியின் தாக்கத்தையும், லெனினை போற்றியும் கம்யூனிச கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அயராது உழைத்த மாணிக்கமாக திகழ்ந்த சிங்காரவேலர். 1946 பிப்ரவரி 11ம் நாளில் காலமானார்.

– எஸ்.குமார்
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
தென்சென்னை