மும்பை
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது.இந்தத் தொடருக்காக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு வகையான வியூகங்களுடன் தயார் நிலையில் உள்ளது.உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் சிறப்புத் திட்டம் என்ற பெயரில் மூன்று வீரர்களைத் தேர்வு செய்து அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி ஆடும் லெவனில் சேர்ப்பது வழக்கம்.இந்நிலையில், வரவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான சிறப்புத் திட்டத்தில் ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரஹானே ஆகிய மூவரும் இடம்பெற உள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறப்பு திட்டம் குறித்து கிரிக் இன்போ இணையத்தளத்துக்கு எம்.எஸ்.கே பிரசாத் அளித்த பேட்டியிலிருந்து,”உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைக் தேர்வு செய்துவிட்டோம்.ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் சிக்கல் உருவாகிறது.எனினும் 20 வீரர்களை உடைய (தற்போதைய ஆடும் லெவனை சேர்த்து) உத்தேச அணியில் விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ரஹானே ஆகிய மூவரைச் சேர்த்து அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆடும் லெவனில் சேர்க்க முயற்சி செய்வோம்.இந்த வீரர்கள் பட்டியலில் காயம் மற்றும் பார்ம் பிரச்சனையில் தொய்வு ஏற்பட்டால் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், அக்‌ஷர் படேல் ஆகியோர் தேர்வாகலாம்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சிறப்பு திட்டத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்களில் ஒருவரை மட்டும் தான் உலகக்கோப்பையில் களமிறக்குவார்கள்.எனினும் இந்தத் திட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.