சென்னை
அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரிய உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை ஆணையத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஆணையத்துக்குத் தடை கேட்டு அப்பல்லோ மருத்துவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 11) விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் கால வரம்பு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.