புதுதில்லி:
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, பாஜக-வை தோல்வி பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள், விளையாட்டு வீரர்களை பாஜக-வுக்குள் வளைத்துப் போட முயற்சித்து வருகிறது.ஏற்கெனவே, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திடம் பேசிப் பார்த்தது. அவரோ பிடி கொடுக்கவில்லை. அடுத்ததாக, தமிழ்நாட்டில் நடிகர் அஜித்குமாரிடம் ஆழம் பார்த்தது. தேர்தலின்போது வாக்களிப்பது மட்டுமே தனது உச்சபட்ச அரசியல் நடவடிக்கை என்று நெற்றியில் அடித்தாற்போல அவர் கூறிவிட்டார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை இழுக்கவும் பாஜக தீவிர முயற்சி செய்தது. ரசிகர்கள் எதிர்ப்பால், எனதுவேலை நடிப்பது மட்டும்தான் என்று அவர் பின்வாங்கிக் கொண்டார்.

இதனிடையே, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஹரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்று, 2 நாட்களுக்கு முன்பாக, சங்-பரிவாரங்கள் ஒரு செய்தியை பரவவிட்டன.
“ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டே பரப்பப்பட்ட வதந்திதான் இது”, தற்போது மறுபடியும் செய்தியாகி இருக்கிறது” என்று சேவாக் கூறியுள்ளார். “அப்போது சரி, இப்போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை” என்று பாஜக-வினரின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.