உருகுவே தேசிய கால்பந்து வீரரான இவர் பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.மெஸ்ஸியைப் போலவே பந்தை கடத்துவதில் சிறப்பு திறன் பெற்றுள்ள சுவரேஜ் வேகமாக ஓடக்கூடியவர்.காலில் பந்து சிக்கிவிட்டால் கோல் நேரடியாக அனுப்பிவிடுவார்.தனது அசத்தலான ஆட்டத்தால் பார்சிலோனா அணி பலமுறை கோப்பை வெல்லக் காரணமாக இருந்துள்ளார்.

சுவரேஜ் பெரும்பாலும் கோலடிக்க ஆசைப்படமாட்டார்.ஆனால் பந்தை எப்படிக் கடத்துவது என்பது தான் அவருடைய முதல் எண்ணம்.சிறுத்தை வேகத்தில் ஓடி, பாய்ந்து, பதுங்கி என எப்படியாவது பந்தை பறித்துவிடுவார்.பந்து அவருக்கு கிடைத்து விட்டால் ஜெட் வேகத்தில் கோல்கம்பம் நோக்கிப் பறக்க ஆரம்பித்துவிடுவார்.குறிப்பாகத் தான் கடத்தி செல்லும் பந்தை எதிரணி வீரர் எவரேனும் பறித்துவிட்டால் சுவரேஜூக்கு பயங்கர கோபம் வரும்.

அடிக்க மாட்டார்… திட்ட மாட்டார்…. ஆக்ரோஷமாக கத்த மாட்டார்…ஆனால் பள்ளிக்குழந்தைகள் போலக் கடித்து வைத்து விடுவார்.

விளையாட்டுத் துறையில் இவரைத் தெரியாதவர்கள் நிறையப் பேர்கள் இருக்கலாம்.ஆனால் இத்தாலி மக்கள் இவரை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். கால்பந்து விளையாட்டில் கடி வித்தையைத் தொடங்கி வைத்த பெருமைக்கு உடையவர் சுவரேஜ். கால்பந்து துறையில் ஆர்வம் உள்ள இத்தாலி மக்களுக்கு “கடி (BITE)” என்ற வார்த்தையை உச்சரித்தால் லூயிஸ் சுவரேஜை சுட்டிக்காட்டுவார்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜார்ஜியோவிடம் பந்தை கடத்துவதற்காக லூயிஸ் சுவரேஜ் அவரைக் கடித்து வைத்துவிட்டார்.மைதானத்தில் ஜார்ஜியோ அதை வெளிப்படையாகக் காட்ட நாய் கடித்தது போல இருந்தது. உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்ல கிளப் தொடர்களில் பிஎஸ்வி வீரர் ஓட்மன் பக்கல், செல்சியா வீரர் இவானோவிச் ஆகியோரையும் ருசி பார்த்துள்ளார்.
லூயிஸ் சுவரேஜ் மைதானத்தில் கொட்டாவி விடுவதற்காக சாதாரணமாக வாயைத் திறந்தால் கூடக் கடிக்க தான் வருகிறார் என எதிரணி வீரர்கள் தெறித்து ஓடி விடுவார்கள்.சுவரேஜின் கடி வித்தையை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.கடி வித்தைக்காகப் பலமுறை தடை உத்தரவு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டில் அடிதடி, உதை என மோதல் சம்பவம் இருந்தாலும், கடி வித்தையை பிரபலப்படுத்திய இவர் வேற மாதிரி தான்…