உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல்துறை ஆணையர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்)முன்பு ஒரு நடுநிலையான இடத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அதே சமயத்தில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், மேற்படி காவல்துறை ஆணையரைக் கட்டாயப்படுத்தும் விதத்தில் நடவடிக்கை எதையும் எடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருப்பதன் மூலம் ஒரு பக்கத்தில் மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் மறுபுறத்தில் பாஜக மற்றும் மோடி அரசாங்கம் ஆகியவற்றின் அரசியல் நிலைப்பாடுகளை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.

மமதா பானர்ஜியும் அவரது அரசாங்கமும் தர்ணா மேற்கொண்டதன் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் சூழ்ச்சியால் பழிவாங்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற அதே சமயத்தில், பாஜக-வோ மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் காவல்துறை ஆணையரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குள் செல்ல முயன்றதை, சாரதா ஊழல் வழக்கிலும் மற்றும் இதுபோன்ற பல்வேறு சீட்டுநிறுவனங்களின் ஊழல்கள் வழக்குகளிலும் ஒரு மாபெரும் நடவடிக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. இது இரண்டுமே உண்மையல்ல.

திரிணாமுல் காங்கிரஸ் தலைமையும், அதிகாரவர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுடன் அதற்கிருக்கின்ற கள்ளப்பிணைப்பும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுத்தான் சாரதா சீட்டு நிறுவனம் மற்றும் ரோஸ் வாலி சீட்டுநிறுவனங்களில் ஊழல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் பாடுபட்டு சிறுகச்சிறுகச் சேர்த்த சேமிப்புப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். உதாரணமாக,  சாரதா குழும நிறுவனங்கள் 17 லட்சம் ஏழை மக்களிடமிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்டியிருந்தது. இதன் வணிகம் சீர்குலைந்தபின், இதில் பணத்தைப் போட்டிருந்த ஏழை மக்கள் தங்கள் சேமிப்புத்தொகைகளை முழுமையாக இழந்தனர். இந்த ஊழலில் தங்களுக்குப் பங்கு இருப்பதை, திரிணாமுல் காங்கிரசும் மமதா பானர்ஜியும் மூடிமறைத்திட தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள் சீட்டு நிதிநிறுவனங்கள் ஊழல்கள் தொடர்பான வழக்குகளின் புலன்விசாரணைகளை நடத்துவதில் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு ஆர்வம் காட்டாததன் காரணமாகவும், மேலும் ஊழல்கள் நாட்டின் பல மாநிலங்களில் நடந்துள்ளதாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேறு சிலரும் உச்சநீதிமன்றத்தை அணுகி, இவற்றின்மீது மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் மூலமாக ஓர் ஒருங்கிணைந்த புலன்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரினார்கள். உச்சநீதிமன்றம், 2014 மார்ச்சில் சீட்டு நிதிநிறுவனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் புலன் விசாரணை நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இவ்வாறு சிபிஐ மேற்கொண்ட விசாரணையின் காரணமாகத்தான் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குனால் கோஷ் மற்றும் சிரிஞ்சாய் போஸ் ஆகியவர்களும், மேற்கு வங்க மாநில அரசில் அமைச்சராக இருந்த மதன் மித்ரா என்பவரும் முன்னாள் காவல்துறைத் தலைவராக இருந்த ராஜாத் மஜூம்தார் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர், திரிணாமுல் காங்கிரசின் மக்களவைக் குழுத் தலைவராக இருந்த சுதிப் பந்தோபாத்யாயா என்பவரும் ரோஸ் வாலி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

எனினும், சிபிஐ, பாஜகவின் அரசியல் தேவைகளுக்கிணங்க. தன் புலன்விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டிடாமல் பின்னர் நத்தை வேகத்தில் செயல்படத் தொடங்கியது, அல்லது, முற்றிலுமாக நிறுத்திவிட்டது. மத்திய பாஜக அரசு, சிபிஐ இவ்வழக்குகள் தொடர்பாக மேற்கொண்டுவந்த புலன்விசாரணை என்னும் தடியை, திரிணாமுல் காங்கிரசை தங்கள் விருப்பத்திற்கிணங்க ஆடும் ஒரு பொம்மையாக நடத்துவதற்கு அவ்வப்போது பயன்படுத்தி வந்தது. மேலும் இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த சிலரையும் தங்கள் கட்சிக்குள் இணைத்துக் கொண்டது.

இதில் மிகவும் பிரபலமானவர்கள் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முகுல் ராயும், காங்கிரசைக் சேர்ந்த ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா என்பவருமாவார்கள். திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த முகுல் ராய், சாராதா ஊழல் சம்பந்தமாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்டு வந்தார். ஆனால், அவர் 2017 நவம்பரில் பாஜகவில் இணைந்தபின்னர், சிபிஐ அவருக்கு எதிராக தொடர்நடவடிக்கை எதையும் எடுத்திடாமல் நிறுத்திக் கொண்டது. ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவைப் பொறுத்தவரை, 2014 நவம்பரில் அவருடைய வீட்டை சிபிஐ சோதனை செய்தது, அவரையும் விசாரணை செய்தது. எனினும் இந்த நபரும் 2015 ஆகஸ்டில் பாஜகவில் சேர்ந்தபின்னர், இவருக்கு எதிராகவும் சிபிஐ எவ்விதத் தொடர் நடவடிக்கையும் எடுத்திடாமல் நிறுத்திக் கொண்டது.

சாரதா சீட்டுநிதி நிறுவன ஊழல் தொடர்பான புலன்விசாரணையை சிபிஐ சிறிது காலம் கிடப்பில் போட்டிருந்துவிட்டு, இப்போது, திடீரென்று கொல்கத்தா காவல்துறை ஆணையர், ராஜீவ் குமார், இல்லத்திற்குச் “சென்றிடத்” தீர்மானித்தது. இதற்கு சிபிஐ தரப்பில் சொல்லப்படும் சாக்கு, காவல்துறை ஆணையர், தாங்கள் பலமுறை அனுப்பிய அழைப்பாணைகளையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம். இது உண்மையாயின், சிபிஐ இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடி, நீதிமன்றத்தின் மூலம் கட்டளையைப் பெற்றிருக்க முடியும்.  ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, பாஜக-வின் அரசியல் நலன்களால் உந்தப்பட்டு, அவரது வீட்டிற்குச் சோதனை செய்திட சென்றிருக்கின்றனர். பாஜக-வைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், மமதா பானர்ஜியை இந்த சமயத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட வேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால், மம்தா பானர்ஜியோ, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தான் ஒரு பாஜகவிற்கு எதிரான போராளி என்பது போலவும், தான் எப்போதுமே மாநிலங்களின் உரிமைகளுக்காப் போராடுபவர் என்பதுபோலவும் தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு தன்னை அவர் வெளியே காட்டிக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில், இவ்வூழல்களின் சம்பந்தப்பட்ட தன்னுடைய ஆட்களைப் பாதுகாத்திட வேண்டும் என்பதே இதற்குப்பின்னே அமைந்துள்ள அவருடைய உள்ளார்ந்த நோக்கமாகும்.

2011 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இடது முன்னணி அரசாங்கத்தைத் தாக்குவதற்காகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்காகவும் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் பத்திரிகைகள் தொடங்குவதற்கு, திரிணாமுல் காங்கிரசுக்கு நிதி உதவிகள் அளித்ததில் சாரதா மற்றும் இதரசீட்டு நிதி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவேதான், மக்களைச் சீட்டுநிதி நிறுவனங்கள் மூலமாக சூறையாடிய கயவர்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்கள் மூலமாகத் தாங்கள் பெற்றிட்ட பயன்களை மூடிமறைத்திடவும் வேண்டும் என்பதே மமதா பானர்ஜியின் நோக்கமாகும்.

பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே பரிகசிக்கத்தக்க விதத்தில் நடைபெற்ற இந்த சண்டையை ஒதுக்கிவைத்துவிட்டு, உண்மைப் பிரச்சனையை முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியமாகும். அதாவது, ஊழல் புரிந்த அனைத்து சீட்டு நிதி நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதற்கான போராட்டம் தொடர வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், முன்னாள் காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். ஊழல் புரிந்த அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். சீட்டுநிதி நிறுவனங்களில் பணத்தைப் பறிகொடுத்த அப்பாவி ஏழை மக்களின் சேமிப்புப்பணம் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட தேவையான நடவடிக்கைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்காக சிபிஐ-யின் புலன்விசாரணைகள் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுவதுகூட சிறந்ததாகும்.

(பிப்ரவரி 6, 2019)

(தமிழில்: ச. வீரமணி)