===சீத்தாராம் யெச்சூரி===                                                                                                                                                                                                    2019 பொதுத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள், பிரதமர் மோடிக்கு, மிகவும் படபடப்பை ஏற்படுத்தி இருப்பதை நன்கு காணமுடிகிறது. இதன் காரணமாக, அவர், பல்வேறுவிதங்களிலும் பேசத் துவங்கிவிட்டதைப் பார்க்க முடிகிறது. பாஜக அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு வலுவான ஒற்றுமை உருவாகியிருப்பதைப் பார்த்து, இதுசந்தர்ப்பவாதம் என்றும், பணப் பைகள் ஒன்றுதிரண்டிருக்கின்றன என்றும், மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் காரணமாக அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்றெல்லாம் பேசத் துவங்கியிருக்கிறார். பிரதமரின் ஒவ்வொரு கூற்று குறித்தும் ஆராய்ந்திடுவோம். 2014 அல்ல 2019
2014இல் நடைபெற்ற தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையேற்படாமல் சிதறிக்கிடந்தன என்பதும், அதன் காரணமாகவே வெறும் 31சதவீத வாக்குகளையே பெற்று பாஜக ஆட்சி அமைக்க முடிந்தது என்பதும் மிகவும் தெளிவான ஒன்றாகும். வரவிருக்கும் தேர்தலில் அதற்கான வாய்ப்பு கிடையாது. 2014இல் எதிர்க்கட்சிகள் – ஒட்டுமொத்தமாக 69 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும், அவை பிரிந்திருந்ததன் காரணமாக மோடி ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால் இப்போது, பெரிய மாநிலங்களில் இயங்கும் கட்சிகளிடையே ஒரு சரியான புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமை ஏற்பட்டிருப்பதால், 2014இல் ஏற்பட்ட நிலைமை 2019இல் ஏற்பட வாய்ப்பில்லை. இதுதான்
பாஜக முகாமில் பெரும் அச்ச உணர்வு வளர்ந்து கொண்டிருப்பதற்குப் பிரதான காரணமாகும்.

வெற்றுப் புளங்காங்கிதம்
மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பதற்கு அவற்றின் மத்தியில் நிலவும் விரக்திதான் காரணம் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், அது மோடியின் வல்லமையையே காட்டுவதாகவும், மோடியைத் தனியே எதிர்கொள்ள பயந்துதான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கின்றன என்றும் கூட பாஜக தரப்பில் வீண் புளங்காங்கிதம் நிலவுகிறது. 2014இல் மோடி பிரதமரானபோது இருந்த நிலைமையை இங்கே நினைவுகூர்வது நல்லது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 42 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆயினும் அவற்றில் ஒருசில கட்சிகளுக்குத்தான் மக்களவையில் பிரதிநிதித்துவம் கிடைத்தன. மற்ற கட்சிகள் மாநில அளவில் தேர்தல்கள் நடந்தபோது மாநில சட்டமன்றங்களில் இடம் பிடித்தன. ஆனாலும் பாஜகவுடன் இணைந்திருந்த கட்சிகளில் பல தற்போது பாஜகவிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன.

காலியான கூடாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதானக் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், (தன்னுடைய ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரிய அளவிற்கு பாஜகவிற்கு ஆதரவாக இருந்தது) தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. வட கிழக்கு மாநிலங்களில், அஸ்ஸாமில், பாஜக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்த அஸ்ஸாம் கணபரிசத் (ஏஜிபி), தற்போது பாஜக கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் திருத்தச் சட்டமுன்வடிவைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. பீகாரிலும் பாஜகவுடன் இணைந்திருந்த மூன்று கட்சிகள் தேஜகூவிலிருந்து விலகி, மதச்சார்பற்ற சக்திகளுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில், பாஜகவுடன் இணைந்திருந்த சிறிய கட்சிகள் (இவற்றில் சில அமைச்சரவையிலும் அங்கம் வகித்தன) தற்போது பாஜக கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.மகாராஷ்டிராவில், பாஜகவிற்கு எதிராக சிவசேனை தொடர்ந்து கருத்துக்களைக் கூறிவருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அது என்ன செய்ய இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அதேபோன்று, சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற சில மாநிலங்களிலும்கூட, மாநிலக் கட்சிகள் பலவும் மற்றும் சிறிய கட்சிகளும் தேஜகூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவை அநாதையாக்கிவிட்டன. எனவே, அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்போமானால், தேஜகூட்டணி உலர்ந்து உதிர்ந்துகொண்டிருக்கிறது; மறுபுறம் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி ஒருங்கிணைந்து வலுப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இது ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மத்தியில் விரக்தி உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அச்சத்தின் பிடியில் மோடி
பாஜகவிற்கு எதிரான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் மிக அதிகபட்ச அளவில் ஒருங்கிணைப்பதற்காக மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது கண்டு உண்மையிலேயே பெரும் அச்சத்திற்குள்ளாகி இருக்கிற பிரதமர் மோடி, இவ்வாறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது சந்தர்ப்பவாதம் என்றும், கொள்கையற்ற கூட்டணி என்றும் வசைபாடியிருக்கிறார். 2014இல் தேஜகூட்டணிக்குள் அங்கம் வகித்த 42 கட்சிகளும் எந்த அளவிற்கு கொள்கைகளைக் கொண்டிருந்தவை என்று நாமறிவோம். இவற்றில் பல கட்சிகள் ஒன்றையொன்று பார்ப்பதற்கே விரும்பாதவைகளாகும். ஜம்மு-காஷ்மீரில் பாஜகவிற்கும் பிடிபி- கட்சிக்கும் இடையேயான கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தைத் துய்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தவிர வேறு என்னவிதமான பொதுவான அம்சம் இருந்தது? அதேபோன்று அஸ்ஸாம் கண பரிசத்திற்கும், பாஜகவிற்கும் இடையே என்னவிதமான பொதுவான ஒற்றுமை அம்சம் இருந்தது? அசாம் கண பரிசத் அஸ்ஸாமிலிருந்து “அந்நியர்கள்“ வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அதன்மூலம் உருவான ஒரு கட்சி.

ஒன்றையொன்று முன்பும் சரி, இப்போதும் சரி, எதிர்த்துக்கொண்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே என்ன விதமான பொதுவான ஒற்றுமை அம்சம் இருந்தது? பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். பாஜகவைத் தோற்கடித்த பின்னர், நிதிஷ்குமாரின் துரோகமும்,ஐக்கிய ஜனதா தளமும் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது. இவற்றில் என்னவிதமான கொள்கை சம்பந்தப்பட்டிருக்கிறது?
கூச்சநாச்சமில்லாத ‘கிங்காங்’ பயில்வான் பாஜகவைப் பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகளை ஆசைவார்த்தைகள் காட்டியோ அல்லது மிரட்டியோ அல்லது மாநில அரசாங்கங்கள் அளவில் ஆட்சி அதிகாரத்தை அளிப்பதாகவோ கூறித்தான் எவ்விதமான மனசாட்சியுமின்றி தன்னுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது.

கோவா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றபோதிலும், எவ்விதமானக் கூச்சநாச்சமுமின்றி இதர கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அரசாங்கங்கள் அமைத்ததையும் பார்த்தோம். இத்தகைய பேர்வழிகள்தான் தங்களுடைய கடந்தகால நடவடிக்கைகள் குறித்து எவ்விதமான மன உளைச்சலுமின்றி, இப்போது கொள்கை குறித்து பேச முன்வந்திருக்கின்றனர். மதச்சார்பற்ற கட்சிகளுக்கு அறநெறி குறித்தும், கொள்கைகள் குறித்தும் அறிவுரை கூற முன்வந்திருக்கின்றனர்.

இவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியை மூடிமறைப்பதற்காக, மோடியை ஒரு மாபெரும் பயில்வானாக, பத்துபேரையும் ஒரே அடியில் தூக்கி அடிக்கும் “கிங்காங்” போன்று காட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை அடித்துநொறுக்கிக் கொண்டிருப்பதோடு, நாட்டின் பொருளாதாரம், இவர்களின் 57 மாத கால ஆட்சியில் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தில்லி எழுச்சியின்  பொருள் என்ன?
மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, வீரஞ்செறிந்த வெகுஜன போராட்டங்களாக வடிவங்கள் எடுத்துள்ளதை, தில்லி நாடாளுமன்ற வீதியில் சமீபத்தில் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் மாபெரும் பேரணியில் பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து, வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும்போது, உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி விலை நிர்ணயம் செய்திட வேண்டும், விவசாய நெருக்கடியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடன் சுமைகளைச் சமாளிப்பதற்காகவும் அவர்கள் தற்கொலைப் பாதையில் செல்வதைத் தடுப்பதற்காகவும், விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 200 விவசாய சங்கங்கள் இணைந்து மற்றுமொரு மகத்தான பேரணியை நாடாளுமன்றம் நோக்கி நடத்தியதையும், அதில் நாட்டிலுள்ள 21 பெரிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததையும் பார்த்தோம்.

இவ்வியக்கங்களில் நாட்டிலுள்ள பெரும் அரசியல் கட்சிகளின் முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டிருப்பதானது வரவிருக்கும் 2019 பொதுத் தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அணியாக எது இருந்திடும் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைகள், விவசாய நெருக்கடியால் விளைந்துள்ள விவசாயிகளின் பிரச்சனைகள், அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரித்துள்ள பொருளாதார சுமைகளால் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் முடங்கிப்போயுள்ள நிலைமைகள் – என அனைத்தும் 2019 பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய காரணிகளாக மாறியிருக்கின்றன.

12 லட்சம் கோடி ரூபாய் சூறை
இத்துடன், நாட்டின் பொதுப் பணத்தையும், மக்களின் பணத்தையும் சூறையாடும் கார்ப்ப
ரேட்டுகளுக்கு மோடி அரசாங்கம் எவ்வித நாணமோ வெட்கமோ இன்றி அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் அளித்து வருவதும் மக்களிடம் ஆட்சியாளர்கள் மத்தியிலான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட்டுகள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் வங்கிகளை இயல்பா
கச் செயல்படவிடாமல் முடமாக்கியுள்ளனர். பல்வேறு வடிவங்களில் இவர்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொகை வட்டியுடன் சேர்த்து,

சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு நம் நாட்டின் வங்கிகளைச் சூறையாடியவர்கள் நாட்டை விட்டுப் பறந்தோடிச் செல்வதற்கு, ஆட்சியாளர்களே வசதி செய்து தந்திருக்கிறார்கள்.ரபேல் ஊழல் பேர்வழி
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய விதத்தில் ரபேல் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதிலும், புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதிலும் பிரதமர் மோடியே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது இப்போது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைக் காவு கொடுத்தும், இந்திய விமானப் படை, நீண்டகாலமாகக் கோரிவரும்விதத்தில் தேவையான போர் விமானங்களை வாங்காததன் மூலமாக, நாட்டின் பாதுகாப்பு நலன்களைப் பலி கொடுத்தும், தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளியான அனில் அம்பானிக்கு ஆதாயம் அளித்திட வேண்டும் என்பதற்காக, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டி
ருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

அயோத்தி
இந்நிலையில், இவர்கள் இப்போது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனையையும் கையில் எடுத்திருக்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் இது தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்களை மதவெறி அடிப்படையில் ஒருங்கிணைத்திட வேண்டும் என்பதற்காகவே இப்பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், அறநெறிப் போலீசார் என்ற பெயரிலும் இயங்கிடும் தனியார் கூலிப்படைகள் மனிதாபிமானமற்ற முறையில் கொடிய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும், இளம்சிறுமிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆபத்தின் பிடியில் நாடாளுமன்றம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி அரசாங்கமானது, அரசமைப்புச்சட்ட நிறுவனங்கள் மீதும் அதிகாரமையங்கள் மீதும் மிகவும் மோசமானமுறையில் எதேச்சதிகாரத் தாக்குதல்களை ஏவியுள்ளது.நாடாளுமன்றமே முக்கியமான சட்டமுன்வடிவுகள் குறித்து விவாதம் எதுவும் நடத்துவதற்குத் தேவையான விதத்தில் முறையாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் 24 மணி நேரத்திற்குள் எவருடனும் முன்னதாகக் கலந்தாலோசனை எதுவும் செய்திடாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமுன்வடிவின் நகலை முன்கூட்டியே
அனுப்பிடாமல், அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்காக 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. இப்பிரச்சனை மீது அனைத்துத்தரப்பினருடனும்  பேசி கருத்தொற்றுமையைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

இதில் சட்டரீதியாக எதிர்கொள்ளவேண்டிய மிகவும் முரண்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றன. சமூகரீதியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டிருப்பவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்ற முறையில்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், வறுமையை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாக இடஒதுக்கீட்டைக் கருதிட முடியுமா? இது ஒரு முக்கியமான கேள்வியாகும். மேலும், பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்கள் யார் என்பதையும் வரை
யறுத்திட வேண்டும். இப்போதுஅரசாங்கம் கொண்டுவந்திருக்கிற அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, ஆண்டுக்கு 8லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறவர்கள் இட ஒதுக்கீட்டின் பலன்களைப்பெறத் தகுதியுடையவர்களாவார்கள்.

இது ஒரு மிக மிக உயர்ந்தபட்ச வரம்பு என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. மானியத்துடனான எரிவாயு சிலிண்டரைப் பெறுவதற்கான பொருளாதார உச்ச வரம்பை இந்த அரசாங்கமே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்திருக்கும் நிலையுடன் ஒப்பிட்டோமானால் இது மிக மிக உயர்ந்தபட்ச வரம்பு என்பதை உணர முடியும். வறுமைக்கோட்டுக்குக் கீழானவர்கள் மற்றும் உணவுப் பொருள்களைப் பெறுவதற்கான நபர்களுக்கு அளித்துள்ள வருமான வரம்புகளைப் பார்த்தோமானால் அவை மிகவும் குறைவாக இருப்பதைக் காண முடியும். தொழிலாளிவர்க்கம், சமீபத்தில் இருநாட்கள் நடத்திய அகில இந்திய வேலைநிறுத்தத்தின்போது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாயாக இருந்திட வேண்டும் என்று கோரியிருக்கிறது. இதனைக் கணக்கிட்டோமானால் ஆண்டிற்கு இது 2.16 லட்சம் ரூபாயாகும். இதனை அளிப்பதற்கே மோடி அரசாங்கம் இது வரைமுன்வரவில்லை. இந்த லட்சணத்தில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என்று கூறப்படுபவர்கள் இடஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற அவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் என்று நிர்ணயித்திருப்பது அபத்தமான ஒன்று என்பதில் ஐயமில்லை.

மேலும், ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய் வருமானம் மற்றும்ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் என்றும் இதில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது நாட்டின் பலபகுதிகளில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகளாகக் கருதப்படுவதில்லை. மேலும் மோடி அரசாங்கமானது, நாட்டில் வறுமையின் விகிதம் குறித்து எவ்விதமான விவரங்களையும் அளித்திடவில்லை. முன்பு கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 35 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களையும், நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 66 ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களையும் ஏழைகள் என்றது. இதற்கும் மேலாக வருமானம் ஈட்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள்.
இவை அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும். ஆனால் நாடாளுமன்றம் இவற்றை விவாதித்திட அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் தன் செயல்பாடுகள் குறித்து பதில் சொல்வதற்கான ஒரே இடம் நாடாளுமன்றம்தான். ஆனால் நாடாளுமன்றத்தின் நேரத்தை வெட்டிச் சுருக்கியிருப்பதன் மூலம் அரசாங்கம் தன் செயல்கள் குறித்து மக்களுக்குப் பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது.

அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் வீழ்த்தப்படும் அபாயம்
உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், அரசாங்கம் தங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கூறிய விவகாரம் அரசாங்கத்தின் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாகும். இப்போது மத்தியக் குற்றப்புலனாய்வுக்கழகத்தின் (சிபிஐ) மீதான தாக்குதல்கள், இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள ரிசர்வ் தொகையை, பிரதமர் கூறியது போன்று, தேர்தல் சமயத்தில் மக்களுக்கு சில லாலிபாப் “மிட்டாய்களை“ அளிப்பதற்காக, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்திவந்தது போன்றவை மிகவும் ஆழமான அம்சங்களாகும். இதுபோன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீதானதாக்குதல்கள், அது மத்தியக் கண்காணிப்பு ஆணையமாக இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையமாக இருந்தாலும்சரி அல்லது மத்திய கணக்குத் தணிக்கைத் தலைவராக இருந்தாலும் சரி, இவற்றின் மீதான தாக்குதல்களுடன்,அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை நியமனம் செய்வது என்பதும் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இவை அனைத்தும், நம் குடியரசின் அரசமைப்புச்சட்ட அடித்தளங்கள் திட்டமிட்டமுறையிலும், வெறித்தனமாகவும் வெட்டிவீழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பதன் அறிகுறிகளாகும்.

அப்புறப்படுத்துவோம்!
இவை அனைத்தும் சேர்ந்துதான், உண்மையில் வரவிருக்கும் தேர்தலில் மோடி அரசாங்கத்தை அப்புறப்படுத்திட வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தை வீழ்த்துவது என்பதன் பொருள், புதிதாக அமையவுள்ள மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம், மக்களின் வெகுஜனப் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கைத் திசைவழியில் நடந்திட வேண்டும் என்பதாகும்.

எனவேதான் கூறுகிறோம், தற்போது அமைந்துள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது, மோடி சொல்வதுபோல வெறும் ‘சந்தர்ப்பவாதம்’ அல்ல,மாறாக, மக்களின் வெகுஜனப் போராட்டங்களின் வாயிலாக விளைந்துள்ள ஒன்றாகும்.
தமிழில்: ச.வீரமணி