புதுதில்லி, பிப்.4-

பொதுச் சொத்தைச் சூறையாடியவர்கள் பாஜகவில் இருந்தாலும் சரி, அல்லது திரிணாமுல் காங்கிரசில் இருந்தாலும் சரி அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எழுந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

2014ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் சாரதா சீட்டு நிறுவனம், ரோஸ் வாலி போன்ற சீட்டு நிறுவனங்கள் சாமானிய மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் சூறையாடியதன் பின்னணியில் உள்ள சதி குறித்து புலன் விசாரணை செய்திட உச்சநீதிமன்றம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தை (சிபிஐ-ஐ) கேட்டிருந்தது. பாஜக, கடந்த ஐந்தாண்டு காலமாக, வாய்ச்சவடால் ஏராளமாகவே அளித்திருந்த போதிலும்கூட,  இந்த விஷயத்தில் ஆழமான முறையில் நடவடிக்கை எதுவும் எடுத்திடவில்லை. இந்தக் காலகட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகுல்ராய், ஹேமந்த ஷர்மா போன்று இந்த ஊழல்களில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசிலிருந்து, பாஜகவிற்குத் தாவிவிட்டனர். இவ்வாறு மக்களின் பணத்தைச் சூறையாடியவர்கள் பாஜகவிலும், திரிணாமுல் காங்கிரசிலும் இருந்ததன் காரணமாக, உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருந்த போதிலும்கூட, புலன்விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்தது.

இந்தப் பின்னணியில்தான், இப்போது மோடி அரசாங்கம், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், சிபிஐ உட்பட அரசமைப்புச்சட்ட நிறுவனங்கள் மீதும் தன்னுடைய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக, எதேச்சாதிகாரத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிராக வங்கத்தில் ஜனநாயகப் படுகொலை செய்வதில் வரலாறு படைத்திட்ட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், அதன் முதலமைச்சரும் எடுத்துள்ள நடவடிக்கைகளும் அரசியல் நோக்கத்துடன் கூடியவைகளேயாகும்.

இவ்வாறு மக்களின் பணத்தை மிகப்பெரிய அளவில் சூறையாடிய கயவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய சொத்துக்கள் அரசுக்கு ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரி வந்திருக்கிறது. இவ்வாறு கயவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுத்திடாமல் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் நாசவேலைகளைப் புரிந்து வந்தன.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள், இடது முன்னணி சார்பாக கொல்கத்தாவில் முன்னெப்பேதும் இல்லாத அளவிற்கு பிரிகேட் பேரேட் மைதானத்தில் பிரம்மாண்டமான பேரணி நடந்து ஒருசில மணி நேரத்திற்குள், நடந்திருப்பது, பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிராக மேற்கு வங்க மக்கள் திரண்டெழுந்திடாமல் தடுக்கக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையேயாகும்.

மக்களின் பணத்தைச் சூறையாடியவர்கள், அவர்கள் பாஜகவில் இருந்தாலும் சரி, அல்லது திரிணாமுல் காங்கிரசில் இருந்தாலும் சரி, அவர்கள் அனைவர்மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைமேற்கொள்ளப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்கள் அரசுக்கு ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும், மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தை வட்டியுடன் மீளவும் மக்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்றும் கோரிவந்ததை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீளவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)