புதுதில்லி, ஜன.27-
கல்புர்கி கொலை மிகவும் ஆழமான ஒன்று என்றும் வரும் பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ள இதன் முழு விசாரணையையும் எதிர்கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் தயாராக இருந்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுத்தறிவாளர்கள் எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக, ஓர் ஒருங்கிணைந்த, நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொலை செய்யப்பட்ட எம்.எம்.கல்புர்கியின் மனைவி, உமாதேவி கல்புர்கி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் நரிமான் மற்றும் வினீத் சரன் ஆகியோரடங்கிய அமர்வாயம், இது மிகவும் ஆழமான பிரச்சனை என்றும், இது தொடர்பாகத் தங்கள் மாநில அரசின் கருத்துக்களுடன் வரும் கேட்புரை நாளன்று தயாராக இருக்குமாறு மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநில அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவான கண்ணி
உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 11 அன்று நடைபெற்ற இதற்கு முந்தைய விசாரணையின்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் யு.யு.லலித் தலைமையிலான அமர்வாயம், தங்கள் கருத்தை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடமும் தெரிவித்தது.
இவ்வாறு தங்கள் மதச் சிந்தனைக்கு எதிரான கருத்துக்களைக் கூறுபவர்கள் கொல்லபட்ட நான்கு வழக்குகளிலும் கொலை நடந்த விதம் தொடர்பாக பொதுவான கண்ணி இழையோடுவதாக உச்சநீதிமன்றம் முதன்முறையாகச் சொன்னதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மதவெறியர்களின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
கர்நாடக மாநில அரசாங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வழக்குரைஞர் தேவ்தத் காமத், கல்புர்கி கொலை தொடர்பான புலன்விசாரணைகளிலிருந்து 2017 செப்டம்பர் 5 அன்று பட்டப்பகலில் பெங்களூரில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு முன் கொலைசெய்யப்பட்ட கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விதத்துடன் ஒத்துப்போவதாகக் காட்டியிருந்தார்.
 எனினும் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் உடனடியாக கருத்து எதனையும் தெரிவித்திடவில்லை. மாறாக கருத்துக் கூற கால அவகாசம் கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு இந்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திபோடப்பட்டிருந்தது.
சாகித்தய அகாதமி விருதினைப் பெற்றவரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தவருமான கல்புர்கி, 2015 ஆகஸ்ட் 30 அன்று கர்நாடக மாநிலம் கர்வாத்தில் கல்யாண் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கல்புர்கியைக் கொன்ற அதே கொலைகாரர்கள்தான் 2015 பிப்ரவரி 15 அன்று மகாராஷ்ட்ர மாநிலம், கோலாப்பூரில் கொல்லப்பட்ட பன்சாரே மற்றும் 2013 ஆகஸ்ட் 20 அன்று புனேயில் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர், ஆகியோரையும் கொலை செய்தவர்கள் என்றும் உமாதேவி நம்புகிறார்.
மேலும் உமாதேவி நீதிமன்றத்தில் வாதிடுகையில், சமூகத்தில் நேர்மையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இத்தகைய கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் இருந்துவிடக்கூடாது என்றும் கூறினார்.
(ந.நி.)