சென்னை,
பொருளாதாரத்தில் நலிவடைந்தபொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த 2 வாரத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு எழுந்ததைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கெனவே தெரிவித்தார்.
இந்நிலையில் சமூக நிலை அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு அல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறி திமுக சார்பில் அக்கட்சி எம்.பி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்புரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், “எந்த ஆய்வும் இல்லாமல் இந்த இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு முகாந்திரம் இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டத்தை தடுக்க முடியாததால் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு முதற்கட்ட வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.