வகுப்புவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் உயிர்நீத்த மாணவத் தியாகி அபிமன்யுவின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டுள்ள புதிய வீட்டுக்கான சாவியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜன.14) காலை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க உள்ளார். இதுகுறித்து கட்சியின் இடுக்கி மாவட்ட செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது: கடந்த 2018 ஜுலை 2 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மகாராஜாஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவரான அபிமன்யுவை எஸ்டிபிஐ அமைப்பைச் சார்ந்தவர்கள் படுகொலை செய்தனர். தியாகி அபிமன்யுவின் குடும்பத்தை வறிய நிலையில் இருந்து மீட்க கட்சியின் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. அபிமன்யுவின் சகோதரி திருமணம் அண்மையில் சிறப்பான முறையில் கட்சியின் பொறுப்பில் நடந்தது. அபிமன்யு குடும்பத்தினருக்கு வீடு கட்ட பத்தரை சென்ட் நிலம் கொட்டக்காப்பூரில் வாங்கப்பட்டது. அதில் கட்டுமானப்பணிகளுக் கான அடிக்கல் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனால் நாட்டப்பட்டது. கட்டடப்பணி நிறைவடைந்துள்ள நிலையில் கொட்டக்காப்பூரில் நடக்க விருக்கும் பொதுக்கூட்டத்தில் அபிமன்யு குடும்பத்தினரிடம் சாவி ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்ணடள்ளது.

அபிமன்யு குடும்ப நிதியாக மொத்தம் ரூ.72,12,548 வசூலானது. வங்கியிலிருந்து வட்டியாக ரூ.53,609 கிடைத்துள்ளது. மனை வாங்கவும் வீடு கட்டவும் ரூ.38,90,750 செலவிடப்பட்டுள்ளது. சகோதரியின் திருமணத்திற்கு ரூ.10,00,100. தாய் தந்தையரின் பெயரில் நிரந்தர வைப்புநிதியாக ரூ.23,75,307 வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் கே.கே.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.