வாவர் மசூதிக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்று மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் பாஜக, சங்கபரிவார் அமைப்பினர் திட்டமிட்டு கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற பல்வேறு இளம் பெண்கள், சங்கபரிவார் அமைப்பினரின் தாக்குதல் காரணமாக திரும்பிச் சென்றனர். இந்த சூழலில் கடந்த வாரம் பிந்து, கனக துர்க்கா ஆகிய இரண்டு பெண்கள் கேரள காவல் துறையினரின் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50 வயதுக்குட்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து சங்பரிவார் அமைப்பினர் கேரளா முழுவதும் கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கலவர நோக்கத்துடன் திரண்ட சங்பரிவார் அமைப்பினரை பல இடங்களில் விரட்டி அடித்தனர். இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

இந்நிலையில் சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்குள் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக கேரள காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அனைத்துப் பயணிகளையும் காவல்துறையினர் பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் 6 இளம் பெண்களைக் காவலர்கள் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் என்பதும் திருப்பூர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
3 ஆண்களுடன் வந்த அவர்கள், சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்யப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது போல, வாவர் மசூதிக்குச் செல்லவும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கூறினர். விசாரித்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் மற்றும் கலகத்தை உருவாக்க முயற்சித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே எருமேலி வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்

வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகிறார்கள்.

இங்கு வரும் பெண்கள் உள்பட பக்தர்கள் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை என்று கூறப்பட்டுள்ளது.