சிவன் வழிபாடு ஒன்றுதான். ஆனால், ஒரு கோயிலில் சிவனுக்குப் பெயர் அண்ணாமலையார் என்றால் மற்றொரு ஊரில் பெயர் நடராஜர். இங்கே சிவன் என்பதற்குப் பதிலாக சாத்தன் என்று எழுதிப் பாருங்கள். சிவன் வழிபாட்டைப் போலவே சாத்தன் வழிபாடும் இன்றைய தமிழகம், கேரளத்தை உள்ளடக்கிய பகுதியில் மிகப் பழமையானது. சாத்தனுக்கும் ஊருக்கு ஒரு பெயர். ஆனால், வழிபாட்டு முறைகள் ஒன்றுதான்.
சபரிமலையை தெற்கின் அயோத்தியாக மாற்ற பாஜக-வால் முடியுமா?
சிலப்பதிகாரக் காலத்தில் இருந்தே சாத்தன் வழிபாடு உண்டு. மணிமேகலையை எழுதியவர் பெயரே சாத்தனார் என்பதுதானே. சாத்தன்குளம், சாத்தப்பாடி, சாத்தப்புத்தூர், சாத்தனூர் இந்த ஊர்ப் பெயர்களெல்லாம் தமிழகம் முழுவதும் விரவி இருப்பதைப் பார்த்தால் சாத்தன் வழிபாடு எவ்வளவுதூரம் பரவி இருந்தது என்பது தெரியும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், இதை பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டன. ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரி கடவுள் என்றும், பெண்களை அனுமதிப்பதில்லை என்பது ஐயப்பன் கோயிலுக்கே உரிய மரபு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலின் மரபு என்ன என்பது குறித்தும், அதில் பெண்களுக்கு இடம் உண்டா என்பது குறித்தும் விசாரித்தபோது, தமிழ்நாடு தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சொ.சாந்தலிங்கம் பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசினார்.”ஐயப்பன், ஐயனார், சாத்தன், சாஸ்தா என்கிற எல்லா பெயர்களும் குறிப்பது சாத்தனைத்தான். சிலப்பதிகாரத்திலேயே சாத்தனைப் பற்றிய குறிப்பு உண்டு. தமிழகம் முழுவதும் சாத்தன் வழிபாடு இருந்ததுண்டு. வணிகர்களின் கூட்டத்தைக் குறிக்க ‘வணிகச் சாத்து’ என்ற சொல் உண்டு. அத்தகைய வணிகர்களால் எங்கிருந்தோ இறக்குமதியான கடவுள்தான் இது. இதனை மேல்நிலையாக்கம் செய்து ஹரிஹரபுத்திரன் என்றும், பந்தள ராஜகுமாரன் என்றும், புலிப்பால் குடித்தவர் என்றும் பல கதைகள் பிறகு உருவாயின. தமிழகத்தில் சாத்தனின் வடிவமான ஐயனார் கோயில்கள் கண்மாய் கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் அமைந்திருக்கும். யானை, குதிரை, நாய் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று இந்த இடங்களில் ஐயனாரின் வாகனங்களில் ஒன்றாக இருக்கும்.


சபரிமலையில் பெண்கள் நுழைவது இதுதான் முதல்முறையா? உண்மை என்ன?
தலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்?

ஆனால் சிலர் ஐயனாரை ஆசீவகக் கடவுள் என்றும், யானை ஆசீவகத்தின் எச்சம் என்றும், எனவே யானை மட்டுமே ஐயனாரின் வாகனம் என்றும் கூறுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இது எப்படி இரு்தாலும், சாத்தன் வழிபாட்டிடத்தில் பெண்களை விலக்கிவைக்கிற மரபு எங்கும் இல்லை. கேரளத்திலும் காவுகள் என்று சொல்லப்படும் சாஸ்தா கோயில்கள் பல இடங்களில் உண்டு. இவை எவற்றிலும்கூட குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் விலக்கிவைக்கப்படுவதில்லை” என்று அவர் கூறினார்.
இரண்டு மனைவியுள்ள சாத்தன்
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள மறுகால்தலை என்ற இடத்தில் உள்ள கோயிலில் சாத்தனுக்கு பூரணை, புஷ்கலை என்ற இரு மனைவியர் உண்டு. எனவே, சாத்தன் பிரம்மச்சரிய கடவுள் என்றெல்லாம் கற்பிக்கப்படுவது பிறகு வந்ததுதான் என்று கூறினார்.
குங்குமம் என்பது என்ன?
மாதவிடாய் தீட்டு என்பதெல்லாம் கற்பிதம்தான். நெற்றியில் வைக்கிற குங்குமமே மாதவிடாய்க் குருதியின் குறியீடு என்று இந்தியத் தத்துவஞானத்தின் வரலாற்றை ஆராய்ந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதியுள்ளார்.

சில இடங்களில் யோனி வழிபாடே உள்ளது.
எடுத்துக்காட்டாக கும்பகோணம் அடுத்த தாராசுரம் சக்கராயி கோயிலில் பெண் தெய்வத்தின் சிலை, புடைத்த மார்புடன், அகற்றிய கால்களுடன், யோனி தெரியும் வகையில் அமர்ந்த நிலையில் இருக்கும். அதன் தலைக்குப் பதில் மலர் ஒன்று இருக்கும். அதன் யோனிக்கருகில் குங்குமத்தை கொட்டி வைத்திருப்பர். வணங்க வருகிறவர்கள், மாதவிடாய்க் குருதியைக் குறிக்கும் அந்த குங்குமத்தை எடுத்து இட்டுக்கொள்வர். லஜ்ஜ கௌரி என்ற பெயருடைய இத்தகைய பெண் தெய்வ சிலைகள் வேறு பல இடங்களிலும் உண்டு. எனவே, இங்கே பெண்ணின் மாதவிடாய் என்பது கூட வணங்குவதற்குரியதாகத்தான் இருந்துள்ளது என்று கூறினார். ஐயப்பனும், சாத்தனும் ஒன்றுதான் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் உண்டா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் உள்ள சாத்தன் சிலைகள் இடது காலை குத்துக்காலிட்டும், வலது கால் தொங்கும் வகையிலும் கையில் சாட்டையோடு இருக்கும். ஐயப்பன் சிலை இரண்டு கால்களும் குத்துக்காலிட்டபடி இருக்கும் என்றார் சாந்தலிங்கம். பெண்ணுரிமையாளரும், சாஸ்தாவை தமது குலதெய்வமாக கொண்டவருமான கீதா நாராயணனிடம் இது குறித்துப் பேசினோம். களக்காடு அருகே உள்ள பத்தை என்ற ஊரில் உள்ள சாஸ்தா கோயிலே தங்கள் குல தெய்வம் என்றும், அந்தக் கோயிலுக்கு ஆண்களும், பெண்களுமாக தாங்கள் இணைந்தே எப்போதும் செல்வதாகவும், அரவணப் பாயசம் என்ற படையலிட்டு அந்தக் கோயிலில் ஆண்களும், பெண்களும் இணைந்தே வழிபாடு செய்வதாகவும் தெரிவித்தார் கீதா.

யார் கோயிலுக்குப் போகவேண்டும் என்று யார் முடிவு செய்வது?
தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ, சாத்தன், சாஸ்தா கோயில்களில் பெண்களை விலக்கும் மரபு இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்களே, ஏன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மட்டும் மாதவிடாய்ப் பருவத்தில் உள்ள பெண்களை விலக்கிவைக்கவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஆர்.பி.விஎஸ். மணியனிடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம். அவர், “ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரபு இருக்கும். அந்தப் பெண்களுக்கு உண்மையில் பக்தி ஆவேசம் இருந்தால் அனுமதிக்கிற பிற கோயில்களுக்குப் போகலாமே. சபரிமலைக்கு ஏன் போகவேண்டும்?” என்று கேட்டதுடன், செல்கிறவர்கள் இந்து விரோதிகள் என்றும் குற்றம்சாட்டினார். “நம் நாடு, நீதிமன்றத்தை, அரசை மையப்படுத்தி அதை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் நாடு அல்ல. வழிவழியாக வரும் மரபுகள், குடும்பப் பாரம்பரியத்தால் வழிநடத்தப்படும் நாடு என்று கூறிய அவர், யார் கோயிலுக்குள் போவது என்பதை அரசோ, நீதிமன்றமோ முடிவு செய்ய முடியாது பக்தர்கள்தான் முடிவு செய்யவேண்டும்” என்றார். ஏற்கெனவே கோயிலில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இருந்து அதற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு வாதிட்டும் உள்ளதே என்று சுட்டிக்காட்டியபோது, கோயிலுக்குள் யார் செல்லவேண்டும் என்பதை தேவஸ்வம் போர்டும் முடிவு செய்ய முடியாது என்றார் மணியன். வேறு யார்தான் அதை முடிவு செய்யவேண்டும் என்று கேட்டபோது, அங்குள்ள நம்பூதிரி, தந்திரி, மேல்சாந்திதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறினார் மணியன்.

நன்றி
பி.பி.சி தமிழ்