திருப்பூர்,
திருப்பூரில் ஊழல் செய்வதற்காகவே முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட சாக்கடை கால்வாயானது கொசு உற்பத்திப் பண்ணையாக திகழ்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த கால்வாயை சீரமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 7ஆவது வார்டு அங்கேரிபாளையம் பகுதியில் பாலு இன்னவேஷன் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது. நில அமைப்புக்கு மாறாக முகப்புப் பகுதி தாழ்வாகவும், பின்பகுதி மேடாகவும் அமைக்கப்பட்டதுடன், சாக்கடை கழிவுநீர் வெளியேறிச் செல்லவும் வழியில்லாமல் அரைகுறையாக நிறுத்தப்பட்டது. அத்துடன் இந்த சாக்கடை கால்வாய் கவிதா நகர் வடிகாலில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் கவிதா நகர் சாக்கடை வடிகால் இதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிடல் இல்லாமல் ஊழல் நோக்கத்தில் அவசர கோலத்தில், குளறுபடியாக கட்டப்பட்ட பாலு இன்னவேஷன் குடியிருப்பு சாக்கடையை தற்போது மண்ணைப்போட்டு மூடி தளம் அமைத்து அதற்கு மேல் மீண்டும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.30 லட்சம் மண்ணில் புதைக்கப்பட்டுவிட்டது.

அத்துடன் இப்பகுதியில் உள்ள 60 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீதியில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேபோல் வரி வசூல் மையம், கிராம நிர்வாக அலுவலகம், நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம் ஆகிய அரசுகட்டிடங்கள் இருக்கும் பகுதியில் தேவையில்லாமல் சாக்கடை கட்டுமானப் பணி தொடங்கி அந்த பணியும் முடிக்கப்படாமல் சாக்கடை நீர் தேங்கியுள்ளது.அத்துடன் இதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில்மாநகராட்சி குப்பைகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இப்பிரச்சனைகளில் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த பிரச்சனையில் மேற்படி இடத்தில்கப்பல் விட்டு கொசு விரட்டும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சிசார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் வேலு மார்க்சிஸ்ட் கட்சியினரை தொடர்பு கொண்டு இப்பிரச்சனையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் வாசு குமாருடன் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் இப்பகுதி பொது மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், ஆர்.காளியப்பன் மற்றும் குடியிருப்போர் சங்கத் தலைவர் எம்.வி.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஒரு வார காலத்தில் இப்பிரச்சனையை சரி செய்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் விடும் போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், மாநகராட்சி இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணாவிட்டால் மக்களைத் திரட்டி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.