திருவனந்தபுரம்,

கேரளாவில் பெருமழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காசர்கோடு மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை 167 பேர் பலியாகியுள்ளனர் என்று கேரள முதாவர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,  ”கேரளாவில் இதுவரைக்கும் பெய்த மழைக்கு 167 பேர் பலியாகியுள்ளனர். 2.5லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதனம்திட்டா, எர்ணாகுளம், ஆழப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 23 விமானப் படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

எர்ணாகுளத்தில் இருந்து இதுவரைய் 2,500பேரும், பதினம்திட்டாவில் இருந்து 580 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் படகுகளை வழங்கி உதவி வருகிறது. கேரளாவுக்கு மேலும் 40 மீட்புப் படையினர் வர உள்ளனர்” என்று தெரிவித்தார்.

கேரளாவில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து பெரு மழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களுக்கு  இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவின் கடந்த நூற்றாண்டு வரலாற்றில் இப்படியொரு பேரழிவை அந்த மாநில மக்கள் சந்தித்து இல்லை. கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் தொடர்ந்து தங்களது அண்டை மாநில மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுள்ளதாகவும் அதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.