பாஜகவில் சேருவதென்று நீங்கள் எப்படி முடிவெடுத்தீர்கள்?

ஏதாவது வேலையில் அமர்வதே முதல் தேர்வாக நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்த என் முன்னால் இருந்தது. மாணவர் அரசியலிலோ அல்லது வேறு ஏதாவது இயக்கங்களிலோ நான் அதற்கு முன்பாக எந்தவொரு பங்கையும் வகித்ததில்லை. நான் ஸ்டீபன் கல்லூரியில் இலக்கியம் பயின்றேன், அதற்குப் பின்னர் அகமதாபாத் ஐஐஎம்மில் நிர்வாகத் துறையில் பட்டமேற்படிப்பு டிப்ளோமா படித்தேன். அதற்குப் பிறகு வேலையில் சேர்ந்த நான், திருமணம் செய்துகொண்ட பிறகு என்னுடைய 30ஆவது வயதில் அரசியலில் சேர்ந்தேன். அரசியலில் சேர்ந்தது முற்றிலும் இயல்பாகவே நடந்தது.

மாற்றங்களை எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றிய ஆலோசனைகளை நிறுவனங்களுக்கு வழங்குகின்ற ஆலோசகராக நான் இருந்தேன். எனவே, மாற்றங்களை எப்படிச் செய்யலாம் என்று நிறுவனங்களுக்கு சொல்ல முடியுமென்றால், நாட்டின் மாற்றத்திற்காகவும் ஏன் வேலை செய்யக்கூடாது என்று நான் எண்ணத் தொடங்கினேன். முப்பதே வயதான நான் உலகம் மற்றும் அனைத்தையும் மாற்ற முடியும் என்று நினைக்கத் தொடங்கினேன்.

அது 2004 செப்டம்பர் பா.ஜ.க அதிகாரத்தை இழந்து விட்ட சமயம். திரு.வாஜ்பாய் மீது பெரும் ஆர்வமுள்ளவனாக நான் அப்போது இருந்தேன். எனவே, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தகுதி வாய்ந்தவர் அவர் என்பதை உணர்ந்த நான் அதற்கான பங்கினை ஆற்ற விரும்பினேன். அவரது உடல்நிலை விரைவில் சீர்குலைந்துவிடும் என்று அப்போது நிச்சயமாக எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னிடம் இருந்த அனைத்து கருத்தியல்களுடனும் கருத்துவாதங்களுடனும் 2004ஆம் ஆண்டு நான் பாஜகவில் இணைந்தேன். பின்னர் 2007ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றை அமைத்தேன். பின்னர் 2009 பொதுத் தேர்தலின் போது எல்.கே.அத்வானியின் தகவல் தொடர்பு அலுவலகத்தை நடத்துவதற்கான பொறுப்பு என்னிடம் அளிக்கப்பட்டது.

(கட்சியில் சேர்ந்த உடன், டெல்லியில் அருண் ஜேட்லி தலைமையில் இருந்த பாஜகவின் செய்தி ஊடகக் குழுவிற்கு போரா அனுப்பி வைக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஊடகப் பிரிவின் ஆலோசகராக இருந்த சித்தார்த் நாத் சிங்கிடம் நேரடியாகப் போய் அவர் சேர்ந்தார்.  அரசியலில் சேர்வதற்கு முன், தில்லியில் திரையரங்குகளை நடத்தி வந்த டி.ட்டி. குழுமத்தில் போரா பணிபுரிந்து வந்தார். புகழ்பெற்ற இலக்கிய பத்திரிகையான பிபிலியோவில் இருந்ததுதான் அவர் பார்த்த முதல் வேலை என்று அவர் பெருமையுடன் தன்னைப் பற்றிய குறிப்பில் விவரித்துள்ளார், 2007ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச தேர்தலின் போது ராஜ்நாத் சிங்கிடம் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜ்நாத் சிங்கின் ஊடக உதவியாளராக 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுமையும் அவர் ராஜ்நாத்சிங்குடன் பயணம் செய்தார். மே – ஜூன் மாதத்தில் கட்சி மேலும் இரண்டு புதிய பிரிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று போராவின் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு. மற்றொன்று பசு பாதுகாப்பிற்கான பிரிவாகும்.)

பாஜகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏன் கொண்டு வரப்பட்டது?

ஒரு நாள் நாங்கள் கான்பூரில் இருந்து லக்னோவிற்கு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ராஜ்நாத் சிங் என்னிடம், “என்ன புரோடியுத் ஜி, நாம் இதுவரை கட்சிக்குள் செய்யாத எதை நாம் அவசியம் செய்ய வேண்டி இருக்கிறது?” என்று கேட்டார்.

என் மூளையில் அந்த ஒளி எப்படித் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை. “சார், வாடிக்கையாளரிடம் இருக்க வேண்டிய உறவு குறித்த மேலாண்மையை (CRM) நாம் எப்போதும் கவனிக்க வேண்டும் என்று மேலாண்மை கற்கும் போது எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருக்கின்ற உறவு என்பது வெறுமனே ஒரு பொருளை விற்பதற்கான உறவாக இல்லாமல், அந்த வாடிக்கையாளர் மீண்டும் வாடிக்கையாளர் ஆகின்ற வகையில் அவருடனான உறவைப் பராமரிக்க வேண்டும் என்று அப்போது கற்றுக் கொடுக்கப்பட்டது. பெருநிறுவனத் துறைக்கென்று வாடிக்கையாளர் குறித்த உறவு மேலாண்மை இருக்குமேயானால், அரசியல் கட்சிகளுக்கு என்று ஏன் வாக்காளர் குறித்த உறவு மேலாண்மை (VRM) இருக்கக் கூடாது என்று நான் அவரிடம் சொன்னேன்.

“நல்ல யோசனையாக இருக்கிறது, இதை நாம் செய்யலாம். ஆனால் எப்படிச் செய்வது?” என்று அவர் திரும்பக் கேட்டார். “கட்சியில் ஏற்கனவே 25 பிரிவுகள் இருக்கின்றன. மேலும் ஒரு பிரிவை உருவாக்கி அதை தகவல் தொழில்நுட்ப பிரிவு என்று அழைக்கலாம்.” என்று நான் சொன்னேன்.

ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டாலும், அந்தப் பிரிவு உருவான பிறகு, கட்சியில் இருந்து சிலர் வந்து என்னைப் பாராட்டி “வருமான வரிப் பிரிவிற்கு வாழ்த்துக்கள்.” என்றனர்.

தகவல் தொழில்நுட்ப பிரிவை நீங்கள் தொடங்கிய போது, ​​அதன் மூலமாக நீங்கள் எதை அடைய விரும்பினீர்கள்?

அது சமூக ஊடகங்களுக்கு முந்தைய காலம். கட்சியின் செயல்பாடுகளைத் தானாக இயங்குவதாக மாற்றுவது அந்தப் பிரிவின் முதல் நோக்கமாக இருந்தது.  வாக்காளர்களிடம் சென்று அவர்களுடனான உறவுகளைப் பேணுவதற்கு முன்பாக, கட்சி தானாகவே செயல்படுகின்ற வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. வாக்காளர்களிடம் சென்றடைவது என்பது அந்தப் பிரிவின் இரண்டாவது நோக்கமாக இருந்தது. மூன்றாவது நோக்கமாக தகவல் தொழில்நுட்பக் கொள்கை விஷயங்களில் கட்சிக்கு ஆலோசனை வழங்குவது இருந்தது.

எந்த விதமான கொள்கை விஷயங்களில் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்கினீர்கள்?

நிறைய விஷயங்களில். எடுத்துக்காட்டாக அலைவரிசை. 2007ஆம் ஆண்டில் அலைவரிசை என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. பாஜக அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது. இணைய அறிமுகம் குறித்து  கட்சியின் கொள்கை என்னவாக இருக்க வேண்டும், குரல் வழி இணைய நெறிமுறைகள் குறித்து நமது நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. என்னுடைய நினைவுகள் சரியாக இருக்குமேயானால், ஏறத்தாழ 15 மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைக்கப்பட்டது.

அந்தப் பிரிவிற்குள் பணிபுரிவதற்காக நீங்கள் இணைத்துக் கொள்ள விரும்பியவர்களுக்கான தகுதிகளாக  என்ன இருந்தன?

அவர்களில் பெரும்பான்மையோர் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும், நிபுணர்களாகவும் இருந்தனர். உங்களுக்குத் தெரியும், அது முற்றிலும் தொழில்நுட்பம் குறித்ததாகவே இருந்தது – மக்களைத் திட்டுவது, சண்டையிடுவது பற்றியதாக இருக்கவில்லை.

நீங்கள் இருந்த காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்னவாக இருந்தன?

எங்களைப் போன்று தொழில்நுட்பத்தை வேறு யாரும் மூலதனமாக்கி இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் பக்கமாகச் சாய்ந்திருந்த ஊடக நிறுவனங்கள் கூட, தொழில்நுட்பம் என்று வரும் போது காங்கிரஸை விட பாஜக மிக அதிகமாக முன்னேறியிருந்ததாகவே கூறி வந்தன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மிகஅதிகமாக இருந்த 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில், இளைஞர்களை ஈர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய அடிப்படையில் பார்த்தால், அது மிகவும் வெற்றிகரமானதாகவே இருந்தது. அரசியலைப் பற்றி ஒருபோதும் சிந்தித்திராத மக்கள் அதைப் பற்றி அதிகமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் எங்களுக்கிருந்த ஆர்வம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு நுழைவாயிலாக நாங்கள் பயன்படுத்தியது போன்றவை பாஜகவுடனான தொடர்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன. தானாக இயங்கும் வகையில் கட்சியை மாற்றுவதற்காக, நாங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்தோம்.

(ஹஃப் போஸ்ட் இந்தியாவிடம் போரா பகிர்ந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் குறிக்கோள்கள் ‘ஜெய் விஞ்ஞான் (அறிவியல் வாழ்க)’ என்ற முழக்கத்தோடு துவங்குவதாக இருப்பதைக் காண முடிந்தது. வழக்கறிஞர்கள் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் அரசியலை நோக்கித் திரும்பியிருப்பதை கட்சி கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தகவல் தொழில் நுட்பத் திறமை கொண்டவர்களை கவர்ந்திழுப்பது, பொதுத் தளங்களில் செயல்படுவதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்குவது ஆகியவை தகவல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாவது நோக்கமாக, இருக்கின்றது. இது போன்று இந்திய சுதந்திரப் போராட்டமும் தொழில் வல்லுநர்களாலேயே வழிநடத்தப்பட்டது என்ற உண்மை தகவல் தொழில் நுட்ப பிரிவிடம் தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது” என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. கட்சி ஊழியர்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும், அவர்கள் பொதுமக்களைச் சென்றடையவும் உதவுகின்ற அமைப்புகளை உருவாக்குவது தகவல் தொழில் நுட்ப பிரிவின் பணியாக இருக்கும் என்றும் அது மேலும் கூறுகிறது. தனியார் லாபத்திற்காக மட்டுமல்லாமல், பொது நலனுக்காக தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? அரசாங்கம் மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதற்கான வசதிகளை வழங்குவதற்கு, வருமானத்தை ஈட்டுகின்ற செயல்களுக்கு உதவுவதற்கு, நகர்ப்புற-கிராமப்புற இடைவெளிகளை அகற்றுவதற்கு தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?  என்பது போன்று பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியில் சேருமாறு தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுக்கு அந்த ஆவணத்தின் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பின்னர், பாஜக பொதுச்செயலாளராக ராஜ்நாத்சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பதவியேற்று போரா அசாமிற்கு குடிபெயர்ந்தார். அதற்குப் பின்னர் கட்சியின் புதிய தலைவரான நிதின் கட்காரியால் நியமிக்கப்பட்ட அர்விந்த் குப்தாவிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை மாற்றிக் கொடுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து வெளியேறிய போரா 2016-ல் தனது சொந்த கட்சியான, அசாம் லிபரல் ஜனநாயக முன்னணியை உருவாக்கினார். அசாமில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இருந்த போதிலும், அவர்கள் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.)

இப்போது நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவிடம் நீங்கள் விட்டு விட்டுச் செல்ல விரும்பிய மரபு என்ன?

என்னால் கடைப்பிடிக்கப்பட்ட மரபு நீடித்து நிற்கவில்லை. அது தலைகீழாக மாறிவிட்டது. இது தவறான உதாரணமாகக்கூட இருக்கலாம். இது பாஜகவில் வாஜ்பாயி விட்டுச் சென்ற மரபு என்னவென்று இன்று இப்போது அவரிடம் கேட்பதைப் போன்றிருக்கிறது. அந்த மரபு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்த வரையில், அதிர்ஷ்டவசமாக சமூக ஊடகங்கள் என்பது நம்மிடையே இல்லை. அதாவது அது அப்போதுதான் வந்திருந்தது. இந்தியாவில் சமூக ஊடகங்களால் எதுவும் நடக்காது என்றே மக்கள் நிராகரித்து வந்தனர்.

சமூக ஊடகங்கள் இப்போது இருப்பதைப் போன்று ஒரு அசுரனாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?

யாரும் அவ்வாறு நினைத்ததில்லை! ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றி நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம். அப்போது நாங்கள் அதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்த வேளையில், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துவது, குரலை ஜனநாயகப்படுத்துவது, அதனைப் பெறுவதை ஜனநாயகப்படுத்துவது என்று அழகிய வார்த்தைகளில் பல விளக்கங்கள் கூறப்பட்டன. அப்போது எங்களிடம் ஊடகங்கள் இருப்பதாகக் கருதினோம். ஆனால் இப்போதோ எல்லோருமே ஊடகப் பெரும்புள்ளிகளாக இருக்க முடியும். அது இப்போது உள்ளவாறு மாறி விடும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

தகவல் தொழில்நுட்ப பிரிவை ஒரு துருவமுனைப்பு ஆயுதமாக கட்சி மாற்றிவிட்டதாக நீங்கள் எப்போது உணர ஆரம்பித்தீர்கள்?

அது 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது என்றே நான் நினைக்கிறேன். 2014 பிரச்சாரத்தின்போது, ​​ தகவல் தொழில்நுட்ப பிரிவானது முழுமையாக காந்திநகரின் கட்டுப்பாட்டில் இருந்து நிர்வகிக்கப்பட்டது. மோடி அணியினரால் நடத்தப்பட்ட போதுதான் அது சீரழியத் துவங்கியதாக கருதுகிறேன். தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அங்கே ஒரம்கட்டப்பட்டு, முழுமையாக மோடி அணியினராலேயே அது முழுமையாக நிர்வகிக்கப்பட்டது. எனவே அதன் சீரழிவை மோடி அணிதான் துவக்கி வைத்தது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப பிரிவை, அது செய்கிற செயல்களைப் பார்க்கும் போது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எப்போதாவது, அவர்கள் அதைக் கெடுத்து வைத்திருப்பதைக் காணும் போது மனதிற்குள் வலி உண்டாகும். ஆனால், அதைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்கிறேன். உயர்ந்து மேலே செல்கின்ற நிறுவனங்கள் சில சமயங்களில் கீழே வருவதைப் போன்று, என்னால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை ஒரு சிறிய நிறுவனமாகவே நான் பார்த்து வருகிறேன்.

ஆனால் இது ஒரு சிறிய விஷயம் இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு லட்சம் பேரை தகவல் தொழில்நுட்ப பிரிவில் பாஜக நியமிக்கப் போவதாக செய்திகள் வெளி வந்தனவே…

(கேலியாக சிரிக்கிறார்) பணம் இருந்தால், உங்களால் எதையும் செய்ய முடியும். அந்த நாட்களில் எங்களிடம் பணம் இருக்கவில்லை. பாருங்கள், நான் இதை வேறு மாதிரி பார்க்கிறேன் – எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. நான் அந்த வேலையை நேர்மையுடன் செய்தேன். ஆனால் இப்போது யாரோ சிலர் அதை தரைமட்டமாக்கி விட்டார்கள். மேலும், தகவல் தொழில்நுட்ப பிரிவைப் பற்றி மட்டும் தனியாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். பாஜக தலைவரின் கட்டளையையே தகவல் தொழில்நுட்ப பிரிவு நிறைவேற்றுகிறது. தலைவர் எந்தவிதமான பணியை உங்களுக்கு கொடுக்கிறாரோ, அதை நீங்கள் செய்கிறீர்கள்.

நான் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்த காலத்தில், நாங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து, அதை ராஜ்நாத் சிங்கிடம் காட்டினோம். அதை ஏற்றுக் கொண்ட அவர், “சரி, இது உன் வேலை” என்றார். இன்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தலைவரிடம் இருந்து வந்துள்ள கட்டளையை நிறைவேற்றுகிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கட்சித் தலைவரைக் கேட்க வேண்டுமே தவிர, தகவல் தொழில்நுட்ப பிரிவை அல்ல.

ஏன் பாஜகவை விட்டு வெளியேறினீர்கள்?

பிரதமர் வேட்பாளராக கட்சியால் மோடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான் வெளியேற விரும்பினேன்…

நீங்கள் ஏன் அவ்வாறு உணர்ந்தீர்கள்?

எனக்கு சங்கடமாக இருந்தது. என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு மிக அதிகமாக தெரியும் என்றே நினைக்கிறேன். எனக்கு சங்கடமாக இருந்ததை உணர்ந்தேன். இது ஒரு நல்ல தேர்வு இல்லை, மோசமான தேர்வு என்றே நான் நினைத்தேன். ஆனால் இரண்டாவது வாய்ப்பு என்பது  குறிப்பாக பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மோடிக்கும் அது தரப்பட வேண்டும் என்றே என்னுடன் இருந்த எல்லோரும் கூறினார்கள். உச்ச நீதிமன்றம், தீவிரமான ஊடகங்கள், பாராளுமன்றம்… என்று டெல்லியில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன… அவர்அவற்றையெல்லாம் மாற்றுவதில் உறுதியாக இருக்கிறார். எனவே அவருக்கான இரண்டாவது வாய்ப்பைக் கொடுங்கள்  என்று அவர்கள் கூறினார்கள்.

அது விவேகமான அறிவுரை என்பதாக நான் உணர்ந்தேன். அதனால் நான் அவருக்கான வாய்ப்பைக் கொடுத்து, காத்திருந்தேன். அவருக்கு 10 மாத கால அவகாசம் கொடுத்தேன். அப்படியிருந்தும்அதே விஷயங்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பதை நான் பார்த்தபோது, ​​நான் செய்யக்கூடியதாக ஒரே காரியம் மட்டுமே இருந்தது – கட்சியில் இருந்து நான் வெளியேறினேன். 2015பிப்ரவரியில்தான் நான் ராஜினாமா செய்தேன்.

அதே விஷயங்கள்‘ என்று எதைச்  சொல்கிறீர்கள் என்பதை  உங்களால் விளக்க முடியுமா?

குஜராத்தில் நடக்கின்ற அதே விஷயங்கள் – தனிமனிதன் ஒருவரும், அதிகாரத்துவமும் இணைந்து நடத்துகின்ற  நிகழ்வை நீங்கள் முன்னரே அறிந்திருக்கிறீர்கள். அதே போன்று இப்போது மத்தியிலும்  நடக்கிறது. உண்மையில், நாட்டை ஒரு தனிமனிதன் இயக்குவதாகவும்,கட்சியை மற்றொரு தனிமனிதன் இயக்குவதாகவும் இருக்கிறது. குஜராத்தில் அவர்கள் என்னசெய்தார்களோ, அதைப் போன்று ஊடகங்கள், சமுதாயம் மற்றும் கருத்து வேறுபாடுகளின் மீது கண்காணிப்பு, அழுத்தம்  ஆகியவற்றைக் கொடுத்து – தனி மனிதர் ஒருவரும் அவருடைய சதிக் கூட்டமும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம்,  ஜிஎஸ்டி,  அது இது என்று குஜராத்தில் நடந்ததைப் போன்று முக்கியமான  அனைத்து கொள்கை முடிவுகளையும் தனிமனிதர் ஒருவரே எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த. 10 மாதங்களில் இது போன்ற விஷயங்கள் மாறவில்லை என்பதையே என்னால் கண்டறிய முடிந்தது.

2004ஆம் ஆண்டு நீங்கள் கட்சியில் சேர்ந்தீர்கள். 2001ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்ததுஅதற்கும் முன்னாலேயே பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்து அமைதியின்மையை ஏற்படுத்தி, அதையொட்டிய கலவரங்களுக்கு அத்வானி காரணமாக இருந்ததாக பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.  நாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்று நீங்கள்விரும்பியதாகச் சொன்னீர்கள். அப்படி என்றால் கட்சியின் வகுப்புவாத வரலாற்றை எப்படி உங்களால்  புறக்கணிக்க முடிந்தது?

இந்த வன்முறையின் பின்னணியில் தர்க்கம் எதுவுமில்லை என்று நான்  நினைக்கவில்லை. 2001இல்  ‘ராஜதர்மம்’  பற்றி  பேசி,  மோடியின்  பாரபட்ச அரசியலைத் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்ற மறுப்பை வாஜ்பாய்ஜி வெளிப்படுத்தினார் என்ற உண்மை குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இதில் மற்றுமொரு விஷயம் இருக்கிறது. உள்கட்சி அரசியலின் காரணமாக,அவ்வாறு அவர் விரும்பினாலும்கூட மோடியை பதவியில் இருந்து இறக்க அவரால் முடியவில்லை. கோவாவுக்குச் சென்ற அந்த விமானத்தில், எல்லோரும் அவர் மீது பாய்ந்தனர். அவரால் எதையும் செய்ய முடியவில்லை. நான் அவரிருந்த அந்த கையறுநிலை குறித்து புரிந்து கொண்டேன். முதலாவதாக, அவர் 23 கட்சி கூட்டணியைக் கொண்டு  இயங்கிக் கொண்டிருந்ததால், அவரிடம் முழு அதிகாரம் என்பது இருக்கவில்லை. கட்சிக்குள்ளாக, கட்சியின் கட்டுப்பாடு முழுவதுமாக அத்வானியிடமே இருந்தது. அவர் விஷயங்களை மாற்ற வேண்டும் என்றுவிரும்பியதாகவும்,  ஆனால் அவரால் அதை மாற்ற முடியவில்லை என்றே நான் கருதுகிறேன். பாஜக மீதான  என் ஆர்வத்திற்கு காரணம் பாஜகவோ அல்லது ஆர்எஸ்எஸ்சோ  அல்ல,வாஜ்பாயி மட்டுமே அதற்கான காரணமாக இருந்தார்.

தகவல் தொழில்நுட்ப பிரிவின் போக்கு குறித்து  நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?

தகவல் தொழில்நுட்ப பிரிவின் போக்கு ஒரு வகையில் சிமி அமைப்பைப் போலவே சென்றிருக்கிறது. சிமியின் முதல் தலைவராக இருந்து அதைத் துவங்குவதில் முக்கிய பங்கற்றியவர், இப்போது அமெரிக்காவில் பேராசிரியராக  இருக்கிறார். அது இந்தியாவில்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும். அவர் சிமியை வேறு நோக்கத்துடனே தொடங்கினார் என்பது உங்களுக்குத் தெரியும். பின்தங்கியிருந்த முஸ்லீம் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே அவர் அதனைத் துவங்கினார். கல்வி அதிகாரத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை முன்னேற்ற முடியும் என்பதே சிமி அமைப்பின் பின்னணியில் இருந்த முக்கிய நோக்கமாக இருந்தது என்று அதன் நிறுவனர் பின்னர்  ஒருமுறை சொன்னார்.

அது ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக பின்னர் மாறியது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும்  வித்தியாசமான குறிக்கோளுடன் துவக்கப்பட்டது. அது யாரையும் திட்டுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அது கட்சியின் கலாச்சாரமும்  இல்லை  என்றே நான் நினைக்கிறேன். பாஜக என்பது பொதுவாக கலாச்சாரம் மிகுந்த கட்சியாக, அது போன்ற உணர்வு இருக்கிறது, கட்சிக்கென்று சில சீரொழுங்குகள் இருக்கின்றன. அது இப்போது எல்லா வரம்புகளையும் கடந்து சென்று விட்டது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு இந்த மாதிரி மாறியிருப்பது குறித்து அதைச் சரிசெய்வதற்கான அறிவுரை உங்களிடம் இருக்கிறதா?

கட்சியின் தலைவரைச் சரி செய்யாத வரையிலும், உங்களால் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சரி செய்ய முடியாது.

நன்றி ; https://www.huffingtonpost.in/2018/06/22/its-like-frankensteins-monster-the-father-of-the-bjps-it-cell-says-team-modi-started-the-rot_a_23464587/

 தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.