====மதுக்கூர் இராமலிங்கம்====
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யையும், புனைசுருட்டையும் அள்ளிவீசி ஆட்சிக்கு வந்தது பாஜக. மோடியை ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும், இவர் பிரதமரானால் இந்தியாவை குஜராத் போல ஜொலிக்க வைத்துவிடுவார் என்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் காற்றடித்து மோடி பிம்பத்தை பெரிதாக்கின. ஆனால் தேர்தலின் போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியினால் நிறைவேற்ற முடியவில்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம், விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவோம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று அளித்த வாக்குறுதியில் ஒன்று கூட நிறைவேறவில்லை.

ஆனால் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, அனைத்திற்கும் ஆதார் அட்டை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு அளவில்லாத சலுகைகள், ஏழை, எளிய இந்தியர்களின் வாழ்க்கையை சூறையாடுவது, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது, மதக்கலவரங்களை தூண்டி மக்களை துண்டாடுவது, கல்வியை காவிமயமாக்குவது என மோடி அரசு சொல்லாததை பொல்லாத முறையில் செய்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி நாட்கள் பலவாகிறது.இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அந்த கூட்டணியிலிருந்து விலகி மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது மோடி அரசு ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதுபோல இதையும் பறக்கவிட்டு ஆந்திர மாநிலத்தை கழுத்தறுத்தது. இந்த கோபத்தில் தான் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் விலகி தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. நியாயமாக பார்த்தால் நம்பிக்கை மோசடி தீர்மானம்தான் கொண்டு வரவேண்டும். ஆனால் அதற்கு நாடாளுமன்ற விதியின்படி வழியில்லை.

மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன. பல்வேறு கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன. உண்மையில் மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழக ஆளும் கட்சியான அதிமுகதான் கொண்டு வந்திருக்க வேண்டும். தமிழகம் அளவுக்கு மோடி அரசினால் வஞ்சிக்கப்பட்ட வேறொரு மாநிலம் இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்தடுத்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே வாழ்நாள் பணியாக கொண்டிருக்கிறது மோடி அரசு.
ஆனால் முற்றிலும் பாஜகவின் அடிமைகளாகவே மாறிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வகையறா பாஜகவினரின் பாதார விந்தங்களில் பரிதாபகரமாக விழுந்து கிடக்கிறது. ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு சொல்லி வாயை மூடுவதற்குள் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடியும், ஓபிஎஸ்சும் கூட்டாக அறிவித்துவிட்டார்கள்.

கட்சியின் கொள்கை, குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகவும் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்திவிட்டதாகவும் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிவிட்டதாகவும் நீட்டி முழக்கி நீட்டோலை வாசித்து பழனிசாமியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். அவர்கள் சொல்கிற கண்ணியம், கட்டுப்பாடு, குறிக்கோள், கோட்பாடு போன்ற வார்த்தைகளுக்கும் இன்றைய அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தைகளில் பாதியை இவர்கள் ஆளுநர் மாளிகையில் பாதியையும் அமித்ஷா வகையறாவிடம் பாதியையும் அடகு வைத்து பல மாதங்களாகவிட்டது. அடகு வைத்ததை மீட்க முடியாததால் இப்போது வந்த விலைக்கு விற்றுவிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொள்கை, கோட்பாடு, கடமை, கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளே இவர்களை பார்த்து கூடி கும்மி அடித்து குலுங்கி குலுங்கி சிரிக்கும்.

தில்லி மேலிடத்தின் உத்தரவின் காரணமாகவே தம்மை வெளியேற்றியிருப்பதாக பழனிசாமி உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பது போல இன்றைய அதிமுகவை நடத்தி கொண்டிருப்பதே பாஜகதான். பகவத் கீதையில் கிருஷ்ணன் அனைத்தும் நானே, கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே, சொல்பவனும் நானே, கேட்பவனும் நானே என்று சொல்லுவது போல அதிமுகவை உடைத்ததும் அவர்கள்தான், சேர்த்ததும் அவர்கள்தான், அப்படியே விழுங்கிவிட திட்டமிட்டிருப்பதும் அவர்கள்தான். ஜெயலலிதா சமாதி அருகில் தியானம் இருந்து தர்மயுத்தத்தை துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம். பின்பு இரண்டு அணிகளும் ஒன்றாகி ஓபிஎஸ் ஈயம் பித்தளையை பேரிச்சம்பழத்திற்கு விற்பது போல தர்மயுத்தத்தை கைவிட்டு துணை முதல்வரானார். மோடி சொன்னதால்தான் தமது அணியை இணைத்து துணை முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். பதவியேற்பு விழாவின்போது அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவ் எடப்பாடி, பன்னீர் இருவரது கையையும் இணைத்து வைத்ததே இதற்கு சாட்சி. இடையில் துண்டு போடாத குறைதான்.

அதற்கடுத்து நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் சூப்பர் முதலமைச்சராகவே செயல்படுகிறார். ஆய்வு என்ற பெயரில் ஆங்காங்கே சென்று அடாவடி செய்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து நேரடியாகவே உத்தரவு போடுகிறார். தட்டிக்கேட்க வேண்டிய மாநில அமைச்சர்களோ மிக்சரில் கடலைப்பருப்பு தென்படுகிறதா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி, ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தரப்பட்டு அதே மூச்சில் ஆர்கேநகர் இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இது எதேச்சையானது அல்ல. அடிமைகளுக்கு தரப்பட்ட ஆயுள் கால சலுகை. அப்படியிருந்தும் இரட்டை இலை கிழிந்துபோனதற்கு காரணம் அதிமுக அரசு மீதான மக்களின் கோபம் மட்டுமல்ல, மோடி அரசு மீதான கோபமும்தான்.

மோடி அரசு தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகங்கள், வஞ்சகங்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொன்னால் ஏடு போதாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னபோதும் முடியாது என்று மறுத்தது மோடி அரசு. இப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் கூறியபிறகும் மோடி அரசு மறுக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூடி பிரதமரை சந்தித்து, இது குறித்து வேண்டுகோள் விடுக்க முடிவு செய்து பிரதமரிடம் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டபிறகும் தமிழக அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கிறார். இதைவிட அதிமுக அரசை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியபிறகும் மோடி அரசு அதை கண்டு கொள்ளவில்லை. பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டாரே என்று கேட்டால் கூட அமைச்சர் ஜெயக்குமார், மோடி முடியாது என்று சொல்லவில்லை. அவர் இதுவரை எதுவுமே சொல்லவில்லை என்று சமாளிக்கிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கூட கடைசி வரை மோடி அரசு சண்டித்தனம்தான் செய்து கொண்டிருந்தது. இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் தான் மோடி அரசை பணியவைத்தது. அந்த மாணவர்களை கூட ஓட ஓட விரட்டி மோடி அரசுக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்டியது அந்த ஓபிஎஸ் தலைமையிலான அரசு.

மருத்துவக்கல்வியில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடைசிவரை நம்பவைத்து தமிழக மாணவர்களை கழுத்தறுத்தது மோடி அரசு. அப்போதுகூட அதிமுக அரசுக்கு கோபம் வரவில்லை. ஆங்காங்கே நீட் பயிற்சி மையங்களை துவக்கியிருப்பதாக நாடகம் ஆடுகிறது. மருத்துவ முதுநிலைப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் சத்தம் போடாமல் காலி செய்துவிட்டது மோடி அரசு.
உதய் மின்திட்டம், உணவுப்பாதுகாப்புச்சட்டம், ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கீடு என அனைத்திலும் தமிழகத்திற்கு மோடி அரசு தந்தது துரோகம்தான். வறட்சி நிவாரணம், ஒக்கி புயல் நிவாரணம் என தமிழகம் கேட்ட எந்தவொரு நியாயமான நிவாரணத்தையும் மோடி அரசு தந்ததேயில்லை. இதை தட்டிக்கேட்கும் தைரியமும் இவர்களுக்கு இல்லை.

இந்த லட்சணத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு இருப்பதாக தம்பிதுரை பீத்திக் கொள்கிறார். காலில் விழுந்துகிடப்பதும், தமிழக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதும்தான் சுமூக உறவா. நெடுவாசல் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்த மோடி அரசு தற்போது காவிரி பாசனப்பகுதியையே பாலைவனமாக்க துணிந்து பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பச்சை வயல்களை பந்தி வைக்கிறது மோடி அரசு. இதற்கு கூட மாநில அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல உதட்டை அசைத்து முணுமுணுக்கக்கூட இல்லை. அடிமை நிலையில் பரிபூரண நிலைக்கே இவர்கள் சென்று விட்டார்கள். பாலைவனமாகப்போகிற பூமிக்கு காவிரி எதற்கு? அதற்கொரு மேலாண்மை வாரியம் என்பது மோடி அரசின் கணக்காக இருக்கலாம்.

அதனால் காவிரியில் தண்ணீர் வந்துவிட்டால் விவசாயம் செய்வார்கள். பிறகு விவசாயத்தை அழிக்காதே என்பார்கள். எனவே காவிரி காய்ந்தே கிடக்கட்டும் என்பது மோடியின் கணக்கு போல். தமிழகம் பாலைவனமானால் நமக்கென்ன. சேகர்ரெட்டியின் துணையோடு மணல் அள்ளியாவது துட்டு சேர்க்கலாம் என்பது இவர்களது கணக்காக இருக்கும் போலிருக்கிறது.
அம்மாவின் ஆட்சி என்று கூறிக்கொண்டே தமிழகத்தை அழிக்க துணை போகிறது அதிமுக அரசு. பெருச்சாளிகளின் பெரும் சொத்தை கபட பூனை கண்டறிந்து மிரட்ட, பெருச்சாளிகள் சுருட்டியதை அமுக்கிக் கொண்டால் போதும் என்று நினைக்கின்றன. ஆனால் தமிழக மக்கள் அப்படி இருந்து விட முடியாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை கைவிடக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 5 முதல் நடத்திட உள்ள தொடர் ரயில் மறியல் போராட்டம் மோடி அரசுக்கு எதிராகவும் எடப்பாடி, பன்னீர்செல்வம் அரசுக்கெதிராகவும் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இதை வெற்றி பெறச் செய்வது தமிழக மக்களின் ஆகப்பெரும் கடமை.

Leave a Reply

You must be logged in to post a comment.