பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அநியாயமான வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மக்கள் பணத்தை சூறையாடும் தமிழக அரசின் முடிவை எதிர்த்தும், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளை மதித்து பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவதற்குப் பதிலாக காவல்துறை மூலம் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன் உள்ளிட்ட 10 வாலிபர் சங்கத் தோழர்களை கைது செய்த காவல்துறை, அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்துள்ளது. ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத் தோழர்களை கைது செய்த காவல்துறையின் அராஜக நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் சிறையிலடைக்கப்பட்டுள்ள தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறது. காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராகவும், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகவும் வலுவான இயக்கங்களை நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.