செஞ்சூரியன்;
இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்,6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. கேப்டவுனில் கடந்த 5-ஆம் தேதி (வெள்ளியன்று) நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியின் மிரட்டலான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது.மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களான மார்க்ராம்(94),அம்லா(82),டி வில்லியர்ஸ்(63)ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்து.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும்,இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின்(153) மிரட்டலான ஆட்டத்தால் 307 ரன்கள் எடுத்தது.தென்ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மோர்கெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் 28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி இந்திய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கத்தில் திணறியது.டிவில்லியர்ஸ்(80),எல்கர்(61) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 258 ரன்னில் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணி தரப்பில் சமி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 287 ரன்களை தென்னாப்பிரிக்கா நிர்ணயித்தது.இன்னும் ஒன்றரை நாட்கள் இருந்த நிலையில் இரு அணிகளுக்கும் சரி சம வெற்றி வாய்ப்புகள் இருப்பதால் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை(விஜய்,ராகுல்,கோலி) இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
5 -ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா 17 ரன்களில் ரன் அவுட்டாக,பார்த்தீவ் படேல் 19 ரன்களில் வெளியேறினார்.பின் வரிசை வீரர்கள் நெகிடி வேகத்தில் அடுத்தடுத்து சரிந்தனர் .ரோகித் சர்மா மட்டும் 47 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார்.

இறுதியில் இந்திய அணி 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி ஜொஹன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.