நாக்பூர்;
இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பியது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக சமரவிக்ரமா, கருணரத்னே களம் இறங்கினார்கள். சமரவிக்ரமா இசாந்த் சர்மா வேகத்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் புஜாராவிடம் பிடிபட்டார் .

அடுத்து களமிறங்கிய திரிமன்னே-கருணரத்னே கூட்டணி நங்கூரம் போட்டது போல ரன் ஏதும் அடிக்காமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.இந்திய பந்து வீச்சாளர்களும் சளைக்காமல் பந்து வீசினார்கள்.கட்டையை போட்டு கழுத்தறுத்த திரிமன்னே அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டானார்.58 பந்தில் 9 ரன்கள் எடுத்து ரசிகர்களை கடுப்பேற்றினார்.இந்த நங்கூர ஜோடி 25 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருக்கும் போது பிரிந்தது.

முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு ஜடேஜா பந்தில் மேத்யூஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கருணரத்னே-சண்டிமல் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்த நிலையில் கருணரத்னே 51 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து சண்டிமல் உடன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். டிக்வெல்லா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த. சண்டிமல் 57 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அதன்பின் வந்த ஷனகா 1 ரன்னிலும், பெரேரா 15 ரன்னிலும், ஹெராத் 4 ரன்னிலும், லக்மல் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை அணி 79.1 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.