பெய்ஜிங்;
பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து சீனா-வின் ஜிங்ஜியாங் மாகாணத்துக்கு தண்ணீரை திருப்பிவிட ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு புதிய சுரங்கப்பாதை அமைப்பதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.சீனாவிலுள்ள தெற்கு திபெத்தின் புராங் பகுதியில் உருவாகி, இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் பாயும் நதியாக பிரம்மபுத்திரா உள்ளது.
இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து, சீனாவின் வறட்சி பகுதியான ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள டக்லமக்கான் பாலைவனப் பகுதிக்கு தண்ணீர் செல்ல சீனா சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாகவும், திபெத் பகுதி வழியாக ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சீனப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.சீன அரசின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிரம்மபுத்திரா ஆற்றை நம்பியுள்ள, இந்திய, வங்கதேச நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.மேலும், சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது மலைகள் வெட்டப்பட வேண்டும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; நீண்டகால உழைப்பு தேவைப்படும் இந்த திட்டத்திற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலை உள்ளது; சராசரியாக 150 பில்லியன் டாலர் செலவாகும் எனவும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
ஆனால், பிரம்மபுத்திரா தொடர்பாக வெளியான செய்தியை சீன அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகை செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையல்ல; அந்த செய்தி முற்றிலும் தவறானது. எல்லைகளுக்கு இடையிலான நதி பங்கீட்டு விவகாரங்களில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்துள்ளது” என ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.