இஸ்லாமாபாத்,

பனாமா போப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான குற்றச்சாட்டு நீருபனமானதை அடுத்து , அவரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பான பனாமா லீக்ஸ் கடந்த ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களை வெளியிட்டது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இவர் 1990-களில் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாகவும், சில நிறுவனங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடத்தியது. கூட்டுக்குழு விசாரணையின் போது, நவாஸ் ஷெரிப், அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து, நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை பல கட்டமாக நடைபெற்றது வந்தது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் நவாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும்  இந்த ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – என் (PML -N) கட்சி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.