கோவை, மே
புதியபுதிய உத்தரவுளை பிறப்பித்து ஆட்டோ தொழிலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போக்குவரத்து அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து கோவை ஆர்டிஓ அலுவலகத்தை வியாழனன்று ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எப்சி புதுப்பிக்க இதுவரை இருந்த கால அவகாசத்தை நீக்கிவிட்டு, எப்சி தேதி முடிந்த அடுத்த நாளே உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தவறினால் நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் முதல் அபராதத்தை ஆர்டிஓ அலுவலகம் வசூல் செய்து வந்தது.. இதனால் பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் நடத்திய போராட்ட கோரிக்கையை அடுத்து மாநில அரசு அபராத வசூலை நிறுத்திவைக்க தடைவிதித்தது.
மேலும், புதிய கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல் விலையில் கட்டுபடியாகாத நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் வாகனத்தை இயக்கி வருகிற நிலையில் ஆர்டிஓ அலுவலங்கள் இந்த உத்தரவுகளை யெல்லாம் புறம்தள்விட்டு அபராதத்தொகையை தடையின்றி வசூல் செய்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து வியாழன்ன்று சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளரும், ஆட்டோ சங்க கூட்டுக்கமிட்டி தலைவருமான பி.கே.சுகுமாறன் தலைமையில் சிஐடியு, ஏபிடி,  ஏஐடியுசி, எல்பிஎப்,  எம்எல்எப்     ,பிஎம்எஸ்,  பிஎம்கே,  டிஎம்டிகே, எம்எம்கே உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார வளர்ச்சி போக்குவரத்து துனை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அபராதம் என்கிற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை கைவிடு, நீதிமன்ற உத்தரவுகளை அமலாக்கு, ஆட்டோ தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான மீட்டர் கட்டணத்தை அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி கட்டுபடியாகிற வகையில் மீட்டர் கட்டணத்தை அமலாக்க வேண்டும்.
கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆட்டோ மற்றும் ஓலா போன்ற கால் டேக்சிகளை மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்காத நிலையில் தாங்களாகவே நிர்ணயித்து கோவையில் இயக்கி வருகின்றனர். இதுபோன்ற கார்ப்ரேட் நிறுவனங்களின் செயலை போக்குவரத்துதுறை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக  தொழிற்சங்க தலைவர்கள் அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்தநிலையில், அலுவலகத்தில் எந்த அதிகாரியும் இல்லை என்றாதால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் அலுவலக வளாகத்தின் தரையிலேயே அமர்ந்து அதிகாரிகள் வந்து உத்தரவாதம் தரும்வரை காத்திருப்பது என முடிவெடுத்து காத்திருக்கும் போராட்டத்தை துவக்கினர்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆர்டிஒ அதிகாரிகள் போராட்டக்கார்ர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சென்னையில் ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும், ஒருவாரகால அவகாசம் தரும்படியும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சிஐடியு சார்பில் ஆட்டோ சங்க தலைவர் செல்வம், பிஎம்எஸ் வெங்கட்டராமன், ஏஐடியுசி ஷாஜகான், எல்பிஎப் வணங்காமுடி, டிஎம்டிகே அந்தோனி மற்றும் எம்எம்கே, எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சார்ந்த தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்..

Leave a Reply

You must be logged in to post a comment.