சென்னை,
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக்கோரி  சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதித்து கடந்த 2016 ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி  உத்தரவிட்டது. அக்.20-ம் தேதிக்கு முன்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை  மறுபத்திரப்பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை முறைப்படுத்த அரசின் கொள்கை முடிவுகளை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு   கடந்த மார்ச்   28 ஆம் தேதி விசாரணைக்குக்கு வந்தபோது  தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி. ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் கொண்ட அமர்வு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தி உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் படி    அக்டோபர் 20, 2016 முன்பு வீட்டுமனைகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களை   மீண்டும் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அதே சமயம் புதிதாக பத்திரப்பதிவு செய்யும்போது, அவை அரசு அங்கீகாரம் இல்லாமல் இருந்தால் அதனை பத்திரப் பதிவு செய்யக் கூடாது என்றும் இந்த உத்தரவானது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு வியாழனன்று (ஏப். 20) ஆம் ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை முறைப்படுத்துவது தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளின் வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் விதிகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கோரினார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ( ஏப். 21) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளியன்று (ஏப்ரல். 21) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் “கடந்த 09-09-2016 பத்திரப்பதிவுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்பு  4 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. எனவே தடை விதித்த பின் எத்தனை  பத்திரப்பதிவுகள் நடந்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்படி பதிவு செய்திருந்தால் அதை செல்லாது என அறிவிக்க வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பத்திரப்பதிவுக்கு தடை விதித்த பிறகு (9-9-2016 ) ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அப்படி நடந்திருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். அந்த பத்திரப்பதிவுகள் செல்லாது எனக் கூறி இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும்  அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் .”அங்கீகாரமற்ற நிலங்களை, வீட்டுமனைகளை  பத்திரப்பதிவு மற்றும் மறு பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர். இது ஏப்.21 ஆம் தேதி முதல்  மறுஉத்தரவு வரும் வரை  அமலில் இருக்கும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சிறப்பு அமர்வில் விசாரணை
மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையாகும். இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து  வழக்குகளை விசாரிக்கலாம். அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு கோடை கால சிறப்பு அமர்வில் மே 4 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான மே 2, 3 தேதிகள் இதே அமர்வில்  சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த  தேதிகளில்  இந்த வழக்குகள் மட்டும்  நாள் முழுவதும் விசாரிக்கப்படும்.  மற்ற எந்த வழக்குகளும் விசாரிக்கப்பட மாட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.