மாநிலத்தின் வளர்ச்சியே தனது இலக்கு என்று உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபோது யோகி ஆதித்யநாத் கூறினார். அவரது மதவெறி தோய்ந்த அரசியல் தடத்தை அறிந்தவர்கள் எந்த வளர்ச்சியைப் பற்றிக் கூறுகிறார் என்று சந்தேகத்தை எழுப்பியதுண்டு. பெரும்பான்மை இந்து மதத்தினரைச் சிந்திக்கவிடாமல் திரட்டுவது, சிறுபான்மையினருக்கு எதிராக நிறுத்துவது என்ற ஆர்எஸ்எஸ் கலாச்சார ஆக்கிரமிப்புத் திட்டத்தை நோக்கிய வளர்ச்சியே அது என்பது உறுதியாகிறது.

எடுத்த எடுப்பில் ‘அனுமதி பெறாத’ இறைச்சிக் கூடங்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில், குறிப்பாக முஸ்லிம் மக்கள் நடத்துகிற கடைகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடைகளை மூடுவதில் ஈடுபட்டவர்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையினர் அல்ல, சங்பரிவாரக் கும்பல்கள்தான். அடுத்து, காதலர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடுக்கப் பட்டன. சாதி, மத தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் உளியாகிய காதலுக்கு எதிராக ‘ரோமியோ படைகள்’ உருவாக்கப்பட்டு, காதலர்களைப் பொது இடங்களில் அச்சுறுத்திச் சிறுமைப் படுத்துகிற அக்கிரமங்கள் நடந்தேறுகின்றன. இதற்கெல்லாம் காவல்துறையின் மவுன ஒத்துழைப்பும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘வந்தே மாதரம்’ பாட மறுப்பது கவலைக்குரிய விஷயம் என்று மற்றுமொரு தாக்குதலுக்கு அச்சாரம் போட்டுக் கொடுத்திருக்கிறார் மடாதிபதி முதலமைச்சர்.

ஒரு கும்பல் கிறிஸ்துவத் தேவாலயம் ஒன்றில் புகுந்து கலாட்டா செய்திருக்கிறது. மஹராஜ்கஞ்ஜ் மாவட்டத்தில், தத்தாவுலி பகுதியில் உள்ள தேவாலயத்தில் உள்ளூர் கிறிஸ்துவர்களும் அமெரிக்கா, உக்ரைன் நாடுகளிலிருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளும் பிரார்த்தனைக்காகக் கூடியிருந்தபோது, ஏழை இந்துக்களுக்குப் பணம் கொடுத்து மதமாற்றம் செய்யப்படுவதாகக் கூறி இக்கும்பல் ரகளை செய்திருக்கிறது. அராஜகத்தின் உச்சமாக, அங்கிருந்தவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிக்கக் கட்டாயப்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் செய்தது, வழக்கமாகச் சொல்வார்களே ‘ஏதோ சில சிறிய குழுக்கள்’ என்று, அப்படிப் பட்டவர்கள் அல்ல.

யோகி ஆதித்யநாத்தே உருவாக்கி வளர்த்துவிட்ட ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற அமைப்புதான், தங்களை யார் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்புடன் இவ்வாறு செய்திருக்கிறது.மாவட்ட காவல்துறை, தேவாலயத்தில் மதமாற்ற நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை, பிரார்த்தனைக்காகவே கூடியிருந்தார்கள் என்று அறிவித்திருக்கிறது. இப்படி அறிவித்ததற்காக காவல்துறை அதிகாரி என்ன பாடுபடப்போகிறாரோ! அதே வேளையில், வெளிநாட்டவர் பாதுகாப்புப் பிரச்சனை இருப்பதால் அனுமதியின்றி கூட்டம் கூட்டியதற்காக நிகழ்ச்சிஅமைப்பாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிறுபான்மை மக்கள் மனங்களில் கலக்கத்தை ஏற்படுத்திய கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உ.பி. மாநிலத்திலும், பாஜக செல்வாக்குடன் உள்ள மற்ற மாநிலங்களிலும் இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது. மிகப்பெரிய அளவில், மக்களின் மனசாட்சியைத் தட்டி யெழுப்பி, ஒற்றுமையைக் கட்டியாக வேண்டும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டுமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.