கோவை,

கேரள அரசு பவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதை நிறுத்த வேண்டும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் , மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் சார்பில் கோவையில் ஞாயிறு அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத நிலையில், தமிழகம் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசு பவானியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வருவதால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் நீராதாரம் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கான நதிநீர் பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கோவை பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்  வடகோவை ரயில்நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்  தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினரின் தடுப்பை தாண்டி ரயில்நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மங்களூர் விரைவு ரயிலை மறித்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கண்டு கொள்ளாத மத்திய அரசு – இர.முத்தரசன் குற்றச்சாட்டு

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிபிஐ மாநில செயலாளர் இர.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த வறட்சி குறித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும், விவசாய நெருக்கடியை எதிர்கொள்ள நிலவரியை ரத்து செய்துள்ளது. ஆனால் நிவாரணமோ யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுத்தது போல உள்ளது. எனவே மத்திய கால கடனாக மாற்றப்பட்டுள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய்ய வேண்டும். 300க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். மேலும், கர்நாடக அரசு காவிரி நீரை தர மறுத்து, மேகதாதுவில் ரூ.6 ஆயிரம் கோடியில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தொடர்ந்து பல அணைகளைக் கட்டி வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையைத் தொடர்ந்து பவானியாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி தமிழக நீராதாரத்தைத் தடுக்க கேரள அரசு முயற்சிக்கிறது. இந்த மூன்று மாநில முதல்வர்களுடன் சட்ட ரீதியான போராட்டம் நடத்தினாலும், அரசியல் ரீதியான போராட்டத்தையும் தமிழக அரசு நடத்த வேண்டும். மேலும்,  இந்த 3 மாநிலங்களும் தமிழக நதிநீர் உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது என குற்றம் சாட்டினார். மேலும், கேரள அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி தமிழகத்தின் இடதுசாரி கட்சிகள் கேரள கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.