சென்னை: கல்லூரி மாணவியை கடத்தி, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகள் பிரீத்தி. இவர் தனியார் கல்லூரியில் பி.டெக். இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு கல்லூரி முடிந்து திரும்பும்போது ஒரு கும்பல் அவரைக் கடத்தியது. மேலும் அந்த கும்பல் மாணவியின் தந்தையிடம் 2 கோடி ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக மாணவியின் தந்தை பிரபு, சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவியை மீட்பதற்காக பிணைத்தொகையை கொடுக்கச் சென்ற மாணவியின் தந்தை பிரபுவை, மாறுவேடத்தில் பின்தொடர்ந்த காவல் துறையினர் பணத்தைப் பெற வந்த எல்.ஐ.சி. முகவரான பழனிச்சாமி என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்த உதவிபுரிந்த அவரது நண்பர்கள் லோகநாதன், ராஜாமணி, முருகன், கார்த்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி மீட்கப்பட்ட போது அந்த கும்பல் மாணவியை கடுமையாகத் தாக்கியுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து பழனிச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட ஐந்து பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, பணத்திற்காக கல்லூரி மாணவியை கடத்திச் சென்று துன்புறுத்தியது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.