வாஷிங்டன், ஜன. 06 –

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்கள் நீண்ட தலை முடி, தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ளாம் என அந்நாட்டு இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்கள் நீண்ட தலை முடி, தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதற்கு அங்குள்ள சீக்கியர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் இது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ அமைச்சர் எரிக் பன்னிங், ராணுவ வீரர்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் மதநம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கும் வகையில், தலைப்பாகை மற்றும் நீண்ட தலைமுடி அல்லது தாடி வைத்துக்கொள்ள அனைத்து ராணுவ வீரர்களும் அனுமதிக்கப்படுவர். எனினும், மிகவும் அரிதாக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.
மேலும் மத நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கான அனுமதி ராணுவ அமைச்சரால் இதுவரை வழங்கப்பட்டது. இனி பிரிகேட் நிலை அதிகாரிகளே இந்த அனுமதியை வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை சீக்கியர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கிரவ்வி கூறும் போது, “ராணுவத்தின் புதிய விதிமுறைகளை வரவேற்கிறோம். இது சீக்கிய-அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டு ராணுவத்திற்கும் நல்லது. சீக்கிய-அமெரிக்கர்கள் இந்த நாட்டை நேசிக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.