மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியான கடந்த 10 ஆண்டு காலத்தில், எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் 5.62 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடி, கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் ஒருபோக சாகுபடிதான் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

நெல்சாகுபடியை பிரதானமாக கொண்டுள்ள இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சொல்ல முடியாத வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டிலும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. குறுவை சாகுபடி இழப்பால் ஏற்படும் நட்டத்தை சிறுமற்றும் நடுத்தர விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியாது.

அரசு அறிவித்துள்ள 54 கோடி ரூபாய் சிறப்பு நிவாரணத் திட்டம் இவர்களின் பிரச்சனையைப் போக்குவதற்கு உதவாது. 12 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால்தான் மோட்டார் பம்புசெட்களாவது இயங்கும். அதற்கு வழியற்ற சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளோ காவிரி நீரையே நம்பியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்ற ஆணைப்படி வழங்க வேண்டிய 70 டி.எம்.சி. நீரை கர்நாடகம் இன்னும் வழங்கவில்லை. தமிழக அரசோ எந்த திட்டவட்டமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருப்பது வேதனைக்குரியது. நடுவர்மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்து விட்டோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனக் கூறிக்கொண்டிருப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது.

மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியமானதே. அதே நேரத்தில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைத்திடவும், காவிரி ஒழுங்குமுறை குழு அமைத்திடவும், நடப்பாண்டில் சாகுபடிக்கான நீர் பெற்றிடவும் சரியான அணுகுமுறை தேவை.

அந்த அணுகுமுறையை உருவாக்க அனைத்துக்கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பே சரியான வழி.  ஆனால் அவ்வாறு ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்துவதை அஇஅதிமுக அரசு ஏனோ தொடர்ந்து தவிர்த்துவருகிறது.

வியாழனன்று (ஆக.25) பெங்களூரு சென்று கர்நாடக முதல்வரை சந்தித்த தமிழக விவசாயிகளிடம், தற்போதுள்ள நீர் கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கே போதாது என்று அவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்குமா என விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வற்புறுத்தி தமிழ்நாட்டுக்கு உடனடியாக தண்ணீர் பெறுவதற்கு முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி, அனைத்து விவசாயதலைவர்கள் குழு பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவசரமாக அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டுவது முக்கியம். சட்டமன்ற விவாதங்களும் பதில்களும் மட்டுமே போதாது. மத்திய அரசும் இது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை என்று சும்மா இருக்காமல் இரு அரசுகளையும் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வுகாண ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாநிலங்களிலிருந்து தமிழகத்தின் உரியபங்கு நீரை கோரும் அதே சமயம், தமிழகத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமிக்க உரிய பாசனத் திட்டங்களையும் தீட்டி செயல்படுத்த மாநில அரசு முன்வரவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.